Saturday, 30 August 2014

ஆசிரியர் நியமன கவுன்சலிங் இன்று தொடக்கம்


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 14 ஆயிரத்து 700 பேருக்கு ஆசிரியர் பணி நியமனம் வழங்கும் கவுன்சலிங் இன்று தொடங்குகிறது.கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இதில், சுமார் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

அவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
தொடர்ந்து, ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது.அதன்படி, 14,700 பேர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர். தவிர, முதுநிலைப் பட்டதாரிகளின் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கும் மேனிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்பட உள்ளது. இதற்கான கவுன்சலிங் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி 5ம் தேதி வரை இணைய தளம் மூலம் நடக்கிறது. அரசு, நகராட்சி உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களும், அரசு மற்றும் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளிகளில் காலியான பட்டதாரி, ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களிலும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். 

ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள இருப்பிட முகவரியில் மாவட்டத் தில் உள்ள இடங்களில் கவுன்சலிங் நடக்கும். கல்விச் சான்றுகள், ஆசிரியர் தேர்வு வாரிய தெரிவு கடிதம் ஆகியவற்றுடன் கவுன்சலிங்கில் பங்கேற்க வேண்டும். கவுன்சலிங் 32 மாவட்டங்களில் நடக்கிறது.சென்னையில் மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேனிலைப் பள்ளியிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஸ்ரீலட்சுமி மேனிலைப் பள்ளியிலும், காஞ்சிபுரத்தில் டாக்டர் பி.எஸ் சீனிவாசன் நகராட்சி மேனிலைப்பள்ளியிலும் கவுன்சலிங் நடக்கிறது. இன்று தொடங்கும் கவுன்சலிங்கில் அந்தந்த மாவட்டத்துக்குள் காலியாக உள்ள பணியிடங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

அறிவியல் ஆசிரியர்களுக்கு செப்.,1 ல் கருத்தாளர் பயிற்சி


அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில், 9 மற்றும் 10 ம் வகுப்பு அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, மண்டல அளவிலான கருத்தாளர் பயிற்சி முகாம், செப்.,1 முதல் 3 நாட்கள் நடக்கிறது.

மாணவர்களுக்கு எளிதில் புரியும்வகையில் அறிவியலை கற்பிப்பது, அவர்களை போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்வது, பள்ளி அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிப்பது உள்ளிட்டவை குறித்து இம்முகாமில் பயிற்சியளிக்கப்படுகிறது. இதற்காக 32 மாவட்டங்கள் கோவை, திருச்சி, நாகை, தேனி, விருதுநகர் என 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லுாரிகளில் நடக்கும் இப்பயிற்சியில், சிறப்பு மற்றும் முதன்மை கருத்தாளர்கள் (மூத்த ஆசிரியர்கள்) 72 பேர், கருத்தாளர்கள் 264 பேர் பங்கேற்கின்றனர். அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட மாவட்ட உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “இப்பயிற்சி பெறுவோர் பின்னர் மாவட்ட பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பர். மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை துாண்டுவதே இதன் முக்கிய நோக்கம்,” என்றார்.

புதிய ஆசிரியர் பணி நியமனம் : சென்னையில் காலிப்பணியிடம் இல்லை - மூன்று மாவட்டத்தவர் ஏமாற்றம்


சென்னை மற்றும் புறநகர்களில் ஆசிரியர் காலி பணியிடங்கள் இல்லாததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புதிய ஆசிரியர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

புதிதாக தேர்வு பெற்றுள்ள, 14,700 ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்குவதற்கான கலந்தாய்வு, இன்று முதல், வரும், செப்., 5ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், 32 மையங்களில் நடக்கிறது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள, சி.எஸ்.ஐ., செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கலந்தாய்வு நடக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, திருவள்ளூரில் உள்ள, லட்சுமி மேல்நிலைப் பள்ளியிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, காஞ்சிபுரத்தில் உள்ள பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் கலந்தாய்வு நடக்கிறது.

சென்னை நகரம் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லைகளைச் சேர்ந்த சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில், கணிதம் அல்லாத பாடங்களில், ஓரிரு இடங்கள் மட்டுமே காலியாக இருக்கலாம் என, கூறப்படுகிறது. இதனால், சென்னை மற்றும் புறநகர்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர். இவர்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின், வேறு பகுதிகளில் உள்ள பள்ளியை தேர்வு செய்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குனர்


புதிதாக நியமிக்கப்படும் 14,700 ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் திரு. இராமேஸ்வர முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

ஆணை பெற்ற தேர்வர்கள் மருத்துவரிடம் உடற் தகுதி சான்றிதழ் பெற்று தாங்கள் பணிபுரியப்போகும் பள்ளி தலைமையாசிரியரிடம் பணியில் சேரும் தினத்தன்று சமர்பிக்க வேண்டும்.

கலந்தய்வுக்கு செல்வோர் கவனிக்க...


கலந்தாய்வுக்கு செல்லும் ஆசிரியர்கள் ஒருமணி நேரம் முன்னதாகவே செல்ல கேட்டுக்கொள்கிறோம். கலந்தாய்வு மையங்களில் மாவட்டத்திற்கு உட்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ள பள்ளிகளின் பட்டியல் ஓட்டபட்டிருக்கும்... குறைதபட்சம் 5 இடங்களையாவது வரிசைவாரியாக தேர்வு செய்து அப்பள்ளிகளை குறித்து, பதவி நிலை குறித்து, பள்ளிக்கான போக்குவரத்து வசதிகள் குறித்து நன்கு அறிந்துக்கொண்டு கலந்தாய்வு மையத்திற்குள் செல்லுங்கள்.... கலந்தாய்வு மையத்திற்குள் உங்களை தவிர யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை அனைவரும் அறியவேண்டியது மிக அவசியம்.
எனவே பள்ளிகள் குறித்து முழு தகவலுடன் உள்ளே செல்லுங்கள்... உள்ளே அலைபேசி அனுமதிக்கப்படும்... கலந்தாய்வு அறைக்குள் மாநில தேர்வுமூப்பு வரிசை படி 5 பேராக அனுமதிப்பார்கள்... 5 பேறும் பள்ளிகளை தேர்வு செய்தபிறகு தான் "SELECTION OK " குட்டுக்க முடியும் என்பதால் சந்தர்பத்தில் உங்களை அதிகாரிகள் அவசர படுத்த நேரிடும்... பதட்டம் அடையாமல் நீங்கள் ஏற்கனவே பள்ளிகளை தேர்வு செய்து வைத்திருந்தால் பதட்டத்தை தவிர்க்கலாம்..... கலந்தாய்வு அறைக்குள் கைபேசி பயன்படுத்த அனுமதிக்கப் படமாட்டார்கள்... எக்காரணத்தை கொண்டும் யாரும் உங்களிடம் பணம் கேட்டக்கமாட்டர்கள்... கேட்டாலும் கொடுக்கவேண்டாம்... முதல்வரின் ஆணையின் படி அரசின் முதன்மைசெயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி, தொடக்ககல்வி இயக்குனர்களின் நேரடி மேற்பார்வையில் நடைபெறும் மிக நேர்மையாக நடைபெறும் கலந்தாய்வு இது.... யாராவது இடங்களை BLOCK செய்கிறேன் எனக்கூறி லஞ்சம் கேட்டால், ஏமாறவேண்டாம் ... அனைவரும் போட்டோ, தெரிவுக்கடிதம், சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல்களை தேவையான அளவு இப்போதே தயார் செய்துவிட்டு உறங்க செல்லுங்கள்.... மீண்டும் கூறுகிறோம்.... நேரம் தவறாமை கலந்தாய்வில் மிக முக்கியம்... அனைவருக்கும் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இன் நல்வாழ்த்துக்கள். விடியும் காலை உங்களுக்காகவே விடியப்போகிறது... சாதாரண மனிதனாக கலந்தாய்வு அறைக்குள் செல்லும் நீங்கள் சமூகத்தின் ஓர் அடையாளமாக வாருங்கள்.... வாழ்த்துக்கள்....

ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை காரணமாக, தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்


ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை காரணமாக, தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு 'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள் ளது. கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில் முதலில் 29 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

அப்போது தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் (150-க்கு 90 மதிப்பெண்) என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மட்டும் 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டது. அதன்படி, 150-க்கு 82 மார்க் எடுத்தால் பாஸ். இதனால், தகுதித் தேர்வில் கூடுதலாக 45 ஆயிரம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.

வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அறிமுகம்

ஆசிரியர் நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கொண்டுவரப்பட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்களின் பிளஸ்-2 மதிப்பெண் (15 மார்க்), இடைநிலை ஆசிரியர் பயிற்சி மதிப்பெண் (25), தகுதித்தேர்வு மதிப்பெண் (60)ஆகியவை கணக்கிடப்பட்டது.

இதேபோல், பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு பிளஸ்-2 மார்க் (10), பட்டப் படிப்பு (15), பிஎட் (15), தகுதித்தேர்வு மதிப்பெண் (60) ஆகியவற்றை கொண்டு வெயிட்டேஜ் மார்க் மதிப்பிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, 43 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 31,500 இடைநிலை ஆசிரியர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டன.

82-க்கு வேலை 104-க்கு இல்லை

வெயிட்டேஜ் மார்க் அடிப்படையில் 11,254 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், 2,582 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் இறங்கியது.

அதைத் தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல்கள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பிளஸ்-டூ, பட்டப் படிப்பு, பிஎட், இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்த ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தகுதித் தேர்வில் 102 மார்க் எடுத்த எனக்கு வேலை கிடைக்கவில்லை, 82 மார்க் பெற்றவர்களுக்கு வேலை கிடைத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது:

கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ்-2 பொதுத் தேர்வானாலும் சரி, பட்டப் படிப்பு, பிஎட் படிப்பிலும் சரி அதிக மார்க் போடமாட்டார்கள். பிளஸ்-2 தேர்வில் 900 மார்க் வாங்கினாலே பெரிய விஷயம், அதேபோல்தான் பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவதும் கடினம். ஆனால், கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக அதிக மார்க் போடுகிறார்கள்.

தகுதித் தேர்வு அடிப்படையில் நியமனம்

எனவே, 10, 15 ஆண்டுகளுக்கு முன்னர் படித்து முடித்தவர்களின் மதிப்பெண்ணையும், கடந்த சில ஆண்டுகளில் படித்து முடித்தவர்களின் மதிப்பெண்ணையும் சமமாக கருத முடியாது. ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்வதுதான் சரிசமமான போட்டியாக இருக்கும். எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்துவிட்டு தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வுசெய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆசிரியர் கலந்தாய்வு குறித்த சில விளக்கங்கள்


தெரிவுப் பட்டியலில் இடம் பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஏற்கனவே DTED படிப்பதற்காக கலந்தாய்வில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு இதைப் பற்றிய முன்னறிவு இருக்கும் அதே நேரத்தில் கலந்தாய்வு குறித்து மேலும் சில விளக்கங்களை எழுதுவது நாளை கலந்தாய்விற்கு செல்லும் PG நண்பர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் சிறிது தெளிவை உண்டாக்கும் என நினைக்கிறேன்.

1) கலந்தாய்வு தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் onlineவாயிலாக நடைபெறும்.

2) BV இடம் பெற்றவருக்கு முதலில் அதனை தொடர்ந்தே CV இல் இடம்பெற்றவருக்கு பின்பும்பள்ளியைத் தேர்ந்தெடுப்பதாற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்பது தவறு.கலந்தாய்வில் மாவட்ட அளவில் weightage தரவரிசை அடிப்படையிலேயே நடைபெறும்.

3) விண்ணப்பத்தில் தாங்கள் குறிப்பிட்டுள்ள நிரந்தர முகவரிக்கு உரிய மாவட்டத்திலேயே உங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

4) நீங்கள் உங்கள் மாவட்டத்திலுள்ள பள்ளியைத் தேர்ந்தெடுக்க விரும்பவில்லையென்றால் பிற மாவட்டங்களைத் தேர்ந்தெடுக்க மறுநாள் வாய்ப்பு அளிக்கப்படும்.

5) கலந்தாய்விற்கு செல்லும் பொழுது தேர்வு நுழைவுச் சீட்டு( Exam hall ticket), சான்றிதழ் சரி பார்த்தலுக்கான அழைப்பு கடிதம்(CV call letter), தெரிவுப் பட்டியலில் இடம் பெற்றதற்கான சான்ற( selection list copy of you),உண்மை சான்றிதழ்கள். (Original certificates) மற்றும் சிறிய அளவிலான புகைபடங்கள்(Passport size photo)கொண்டு செல்லுதல் உதவிகரமாக அமையும்.
6)மேலும் பிற மாவட்டத்தினை தேர்வு செய்ய இருப்போர் கையில் தமிழக வரைபடமும்,மாவட்ட வாரியாக தெரிந்த நண்பர்களின் தொலைபேசி எண்ணை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

7)கலந்தாய்வு போது Computer முன் உங்களுக்கான இடத்தினை காண்பித்து உடனாடியாக தேர்ந்தெடுக்க நேரிடும்.எனவே முன்னதாகவே 2,3 மாவட்டங்களை தேர்வு செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

8)மேலும் நமக்கு நாமே உதவிக்கொள்வோம்...என்ற கல்விச்செய்தி இணைப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
9)கலந்தாய்வு போது உடன் ஒருவரை அழைத்துச்செல்லலாம் எனவே பதட்டம் இன்றி உங்களுக்கான சரியான இடத்தை தேர்வு செய்யுங்கள்.
வழக்குகளின் நிலை. 
வரும் 01/09/2014 திங்கள் கிழமையன்று அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு வருகிறது.

ஆனால் அவ்வழக்கினால் எவ்வித மாற்றமும் வராது என இறைவன்மீது நம்பிக்கை கொள்வோம்.

தேர்ந்தெடுத்த பள்ளியில் உங்களது முழுத்திறமையினையும் காட்டுங்கள்.மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுங்கள்

பணிசிறக்க வாழ்த்துக்கள்.
அன்புடன் Trs Trichy

அகஇ - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி 10.09.2014 முதல் 12.09.2014 வரை நடைபெறவுள்ளது.


அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள். .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி"
என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி 10.09.2014 முதல் 12.09.2014 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியானது காலை 9.30மணி முதல் மாலை 4.30மணி வரை நடைபெறவுள்ளது.

அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 அன்று நடைபெறவுள்ளது


அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள். .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல்
- வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியானது காலை 9.30மணி முதல் மாலை 4.30மணி வரை நடைபெறவுள்ளது.

பாரதிதாசன் பல்கலை. எம்.எட். நுழைவுத் தேர்வு மையங்கள்


திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 31-ம் தேதி எம்.எட். படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பல்கலைக்கழக தொலைக்கல்வி மையத்தின் மூலம் முதுகலை கல்வியியல் (எம்.எட்) பட்டம் பயில விரும்புவோர்களிடமிருந்து 18,717 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பரிசீலனை செய்து கல்வித் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 65 பேர் மாற்றுத் திறனாளிகள்.

இப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு மாநிலத்தில் 25 மையங்களில் ஆகஸ்ட் 31-ம் தேதி முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் அளித்த முகவரிக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நுழைவுத்தேர்வு நடைபெறும் மையங்கள்: திருச்சி- ஜமால் முகமது கல்லூரி, சிறிமதி இந்திராகாந்தி கல்லூரி, தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்- பாரத் அறிவியல் மேலாண்மைக் கல்லூரி, மன்னர் சரபோஜி கல்லூரி, குந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரி.மேலும் சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள கல்லூரிகளிலும் இத்தேர்வு நடைபெறும்.

தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட தேர்வுமையங்களுக்கு தங்களின் புகைப்படத்துடன் நுழைவுத் தேர்வு நடைபெறும் நாளான ஆகஸ்ட் 31-ம் தேதி காலை 9 மணிக்குச் சென்று, அங்கு பணியாற்றும் பல்கலைக்கழக ஊழியர்களை அணுகி மாற்றுத் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு www.bdu.ac.incde Gu என்ற பல்கலைக்கழக வலைத்தளத்தை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு: 0431- 2407054, 2407027, 2407028.

மாவட்ட வாரியாக கலந்தாய்வு நடைபெறும் இடம் அறிவிப்பு


பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், பின்வரும் இடங்களில் நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

முதுகலை ஆசிரியர்கள்- (மாவட்டத்திற்குள்) 30-08-2014
முதுகலை ஆசிரியர்கள் (வேறு மாவட்டம்) 31-08-2014
இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்) 01-09-2014
இடைநிலை ஆசிரியர்கள்(வேறு மாவட்டம்) 02-09-2014
பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்) 03-09-2014
பட்டதாரி ஆசிரியர்கள் (வேறு மாவட்டம்) 04-09-2014 மற்றும் 05-09-2014

கலந்தாய்வு நடைபெறும் இடம்

1 சென்னை சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-4.

2 கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோயம்புத்தூர்

3 கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்

4 தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி.

5 திண்டுக்கல் அவர்லேடி மேல்நிலைப் பள்ளி, மதுரை ரோடு, திண்டுக்கல்

6 ஈரோடு வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு

7 காஞ்சிபுரம் டாக்டர். பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்

8 கன்னியாகுமரி எஸ்.எல்.பி.மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்

9 கரூர் பசுபதி ஈஸ்வரா நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கரூர்.

10 கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

11 மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, இராஜாஜி மருத்துவமனை அருகில் செனாய்நகர், மதுரை-3.

12 நாகப்பட்டினம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகூர்.

13 நாமக்கல் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.

14 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.

15 புதுக்கோட்டை பிரகதாம்பாள் தேர்வுக் கூடம், (முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில்), புதுக்கோட்டை.

16 இராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.

17 சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, நான்குரோடு, சேலம்.

18 சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை. (மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில்).

19 தஞ்சாவூர் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், தஞ்சாவூர்

20 நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலகம், நீலகிரி.

21 தேனி முதன்மைக் கல்வி அலுவலகம், தேனி.

22 திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், திருவண்ணாமலை.

23 திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவாருர்.

24 திருவள்ளூர் ஸ்ரீலெட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

25 திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, (இரயில் நிலையம் அருகில்), திருப்பூர்

26 திருச்சி அரசு சையத்முர்துசா மேல்நிலைப் பள்ளி, திருச்சி-8.

27 திருநெல்வேலி சேப்டர் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி

28 தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலகம், சீ.வா. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், தூத்துக்குடி.

29 வேலூர் nஉறாலி கிராஸ் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர்.

30 விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலகம், விழுப்புரம்.

31 விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.

32 அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.

Thursday, 28 August 2014

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி: மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவிப்பு

இந்திய அரசு மனிதவள மேம்பாடு அமைச்சகம் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டியினை அறிவித்திருக்கிறது.
சிறந்த கட்டுரைகளுக்கு ரூ.5000 பரிசு வழங்கப்படும். செப்டம்பர் 5 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் பரிசு வழங்கப்படும்.
1 முதல் 5 வகுப்பு வரையிலான குழந்தைகள் தங்கள் கட்டுரையை ஒலிப்பதிவு செய்து அனுப்பலாம்.
போட்டியில் பங்கேற்க இன்று மாலை 5 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதால் உடனடியாக 09015910123 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு


அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பளம் இன்றே கிடைத்துவிடும்!


விநாயகர் சதுர்த்தி தொடர்ந்து விடுமுறை வருவதால் ஆகஸ்ட் மாதத்திற்கான ஊதியம் இன்றே வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.
மேலும் சிலரக்கு இன்று காலை 8 மணியிலிருந்தே ஊதியம் அவர்களது வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆகிவிட்டது

2 மாதங்களுக்கு ஒருமுறைஆசிரியர் பணிபதிவேடு சரிபார்க்க தொடக்க கல்வித்துறை உத்தரவு.!!


ஆசிரியர்களின் பணி பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து உறுதி செய்யுமாறு தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக தொடக்க கல்வித்துறை இயக்குனர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் பணி பதிவேடுகளை உரிய காலத்தில் முறை யாக பதிவு செய்யப்பட்டுள்ளதை 2 மாதங்களுக்கு ஒரு முறை உறுதி செய்து கொள்ள வேண்டும் ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் அவர்கள் பயின்ற உயர்கல்வி விவரங்களை பதிவு செய்யும் முன்பு, உயர்கல்வி பயில அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும், சான்றிதழ்கள் தற்காலிகமா? நிரந்தரமானதா என்பதையும்சரி பார்க்க வேண்டும். ஆசிரியர்களின் வளர் ஊதியம், பதவி உயர்வு ஊதியம் நிர்ணயம் மற்றும் ஓய்வூதியம் அனைத்தும் பணி பதிவேட்டில் உள்ள பதிவுகளின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது.

எனவே ஒவ்வொரு உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் தங்களின்கீழ் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணி பதிவேடுகளில் விவரங்கள் விடுபட்டிருந்தால் 15 நாட்களுக்குள் பதிவு செய்யவேண்டும். இவ்வாறுஅந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓராண்டு இழுபறிக்கு பின்னர் தமிழகத்தில் 1656 இடைநிலை ஆசிரியர்கள் பட்டியல் ரிலீஸ்!


தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு
1,656 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒராண்டு இழுபறிக்கு பின்னர் தேர்வு பட்டியல் வெளியானதால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இடை நிலை ஆசிரியர் பணிக்கு 23.08.2010க்கு பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2012ம் ஆண்டு இரண்டு முறை தகுதித் தேர்வு நடந்த போதிலும் இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடம் பூர்த்தி செய்யப்படவில்லை. 2013ம் ஆண்டுக்கான தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆக.17ம் தேதி நடத்தப்பட்டது.

இதறகான முடிவுகள் வெளியாகி, சான்று சரி பார்ப்பு முடி ந்த போதி லும் வழக்குகள் கார ண மாக ஆசிரியர் நியமனம் இழுபறியாக இருந்தது. தகுதித் தேர்வு முடிந்து ஓராண்டு நிறைவு பெற்று விட்ட நிலையில் ஆசிரியர் நியமனத்தை எதிர்பார்த்து இடைநிலை ஆசிரியர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையில் 2 ஆயிரத்து 584 இடைநிலை ஆசிரியர்கள் 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு நியமிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 21ம் தேதி அறிவித் தது.தொடக்க கல்வித் துறையில் நிரப்பப்படாமல் இருந்த பின்னடவு காலி பணியிடங்கள் 845, தற்போ தைய பணியிடங்கள் 830. சிறுபான் மை மொழி ஆசிரியர்கள் பின்னடைவு காலியிடங்கள் & 102. சிறுபான்மை மொழி தற் போதைய காலியிடங்கள் & 72. பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை பள்ளிகளின் காலியிடங்கள் & 64. ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் காலியிடங்கள் & 669 என மொத்தம் 2 ஆயிரத்து 584 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இதில் முதல் கட்டமாக தொடக்க கல்வித் துறையில் 1675 பணியிடங்களுக்கு 1656 பேர் கொண்ட தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில்
(www.trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை தொடக்க கல்வித் துறையின் மூலம் தனியாக வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது. எஞசியுள்ள 19 பணியிடங்களுக்கு இனசுழற்சி அடிப்படையில் தகுதியானவர்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1656 இடைநிலை ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதால் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டாக ஆசிரியர் நியமனத்தை எதிர்பார்த்த இடைநிலை ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TNTET - பணியிட கலந்தாய்விற்கு செல்லவிருக்கும் நண்பர்கள் கவனத்திற்கு


பணியிட கலந்தாய்விற்கு செல்லவிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் முதலில் வாழ்த்துக்கள் ...
சென்ற ஆண்டு நடந்த கலந்தாய்விற்கு போது பின்பற்றப்பட்ட நடை முறை...

கலந்தாய்வின் போ எந்த வித சன்றிதல்களின் நகல்களும் கேட்பதில்லை... அவர்களிடம் ஏற்க்கனவே நமது புகைப்படத்துடன் கூடிய பட்டியல்கள் இருப்பதால் அதைக்கொண்டு அலுவலர்கள் நமக்கு கலந்தாய்வு நடத்துவார்கள்.. இதுதான் சென்றமுறை TET கலந்தாய்வின் பொது பின்பற்றப்பட்ட நடைமுறை..

நமது பாதுகாப்பிற்க்காக நம் சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்பித்த சான்றிதழ்களின் நகல்களை எடுத்து செல்வோம்..

முக்கியமாக 

1. தேர்வுக்கான நுழைவுசீட்டு 

2. சான்றிதல் சரிபார்ப்பு கடிதம்

3. இறுதிப்பட்டியலில் தேர்வானதற்க்கான அறிவிப்பு நகல். 

4.உங்கள் சன்றோப்பமிட்ட பள்ளி கல்லூரி சான்றிதழ் நகல்கள் 2 செட்...

5. passport size புகைப்படம் 3

புதிய ஆசிரியர் பணி நியமனம் : முதல்வர் இன்று வழங்குகிறார் - தினமலர்


பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சில பேருக்கு, பணி நியமன உத்தரவை வழங்குகிறார்.
பட்டதாரி ஆசிரியரில் சிலருக்கும், முதுகலை ஆசிரியரில் சிலருக்கும், முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. பின் பள்ளிக்கல்வித் துறை, கலந்தாய்வு மூலம், 12 ஆயிரம் பேருக்கும், பணி நியமன உத்தரவை வழங்க உள்ளது. இதுகுறித்த கலந்தாய்வு அட்டவணையும், இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு TET தேர்வு வேண்டாம் தேர்வர்கள் வேண்டுகோள் - தினத்தந்தி


தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடை நிலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 1,649 பேர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடைநிலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 1,649 பேர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள்

தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகளில் காலியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வை நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

தேர்ச்சி பெற்றவர்கள் ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெற்ற மதிப்பெண், ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண் ஆகியவற்றை கொண்டுவெயிட்டேஜ் மதிப்பெண் தயாரிக்கபப்பட்டது.

தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு

அவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அந்த பட்டியல் நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 1,649 பேர் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று ஏராளமான ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி எழுதியவர்கள் காத்திருந்தனர். ஆனால் குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தகுதி தேர்வு வேண்டாம்

இது குறித்து ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படாதவர்கள் கூறுகையில் இனிமேல் ஆசிரியர் தகுதி தேர்வை 2 வருடத்திற்கு நடத்தாமல் இப்போது காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களை கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தனர்.

7 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் இன்று வழங்குகிறார் - தினமணி


தொடக்கக் கல்வித் துறைக்காக 1,649 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரத்து 500 பேரிலிருந்து தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) மூலம் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொடக்கக் கல்வித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் உள்ள பள்ளிகளில் மொத்தமாக இந்த ஆண்டு 2,582 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

இதில் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள 1,649 காலிப்பணியிடங்களுக்கான இடைநிலை ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் மட்டும் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

ஆதிதிராவிடர் நலத் துறை உள்ளிட்ட பிற துறைகளின் கீழ் உள்ள பள்ளிகளுக்காக 900-த்துக்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் வரும் வியாழக்கிழமை அல்லது திங்கள்கிழமை வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.

இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகைக்குப் பிறகு சுமார் 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் ஆசிரியர்களிலிருந்து சுமார் 11 ஆயிரம் பேர் தகுதிகாண் மதிப்பெண் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரத்து 500 பேரிலிருந்து 1,649 பேர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஆங்கிலம், கணிதம், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் 1,236 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

7 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் இன்று வழங்குகிறார்

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை (ஆக.28) வழங்குகிறார்.

இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் என 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக நியமிக்கப்படுகின்றனர். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் இரண்டு பாடங்களுக்கான ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களில் சில துறைகளுக்கான ஆசிரியர்கள் தவிர 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வைத் தொடங்கி வைக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில் 7 பேருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஜெயலலிதா நேரில் வழங்குகிறார்.

பணி நியமனக் கலந்தாய்வு எப்போது?

இப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பெரும்பாலும் அடுத்த வாரத்தில் இருக்கும் எனத் தெரிகிறது. இந்தப் பணி நியமனக் கலந்தாய்வு தேதிகள் ஓரிரு நாளில் இறுதிசெய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் 87 பேர் கூடுதலாக தேர்வு


தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 87 பேர் தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு கூடுதலாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆக.17, 18ம் தேதிகளில் நடத்தப்பட்டது. 

இதில்தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரி பார்ப்பு பணிகள் முடிந்த போதிலும் ஆசிரியர் நியமனம் தாமதமாகி வந்தது. வெயிட்டேஜ் தொடர்பாக பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் ஆசிரியர் நியமனம் இழுபறியாக இருந்தது.இந்நிலையில் கடந்த 10ம் தேதி தகுதித் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள்அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதில் தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மட்டும் பள்ளிக் கல்வித் துறையில் 772 பேர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து கூடுதலாக 87 பேர் தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு ள்ளனர்.

Tuesday, 26 August 2014

முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியீடு.


முதுகலை ஆசிரியர் தேர்வில், மீதம் இருந்த இயற்பியல், வணிகவியல் மற்றும்பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), நேற்றிரவு வெளியிட்டது. 
அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 2,895முதுகலை ஆசிரியரை தேர்வு செய்ய, கடந்த ஆண்டு, போட்டித்தேர்வு நடந்தது. இதில், பல கட்டங்களாக, பல பாடங்களுக்கு, இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.இயற்பியல், வணிகவியல், பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான பட்டியல் மட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்த பாடங்களுக்கு தேர்வு பெற்றவர் முடிவையும், நேற்றிரவு ,www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட்டது.இயற்பியல் 228, வணிகவியல் 300, பொருளியல் 257 பணியிடங்கள் என, 785 பணியிடங்களுக்கு, தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.5,000 : 32 மாவட்டத்திற்கு ரூ.71 கோடி


அரசு பள்ளிகளில் 2013-14ல் பிளஸ் 2 முடித்த ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் இடை நிற்றல் கல்வி தடுத்தல் நிதி வட்டியோடு வழங்க அரசு ரூ.71 கோடி ஒதுக்கியுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிற்றல் கல்வி தவிர்த்தல், உயர்கல்வியை தொடரும் வகையில் 2011-12ம் கல்வியாண்டில் முறையே ஆண்டுக்கு பத்தாம் வகுப்பு, பிளஸ்-1விற்கு ரூ.1,500, பிளஸ்2 விற்கு ரூ.2 ஆயிரம் , வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இத்தொகை மாணவர்களுக்கு நேரடியாக சேர வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்கி, அதற்கான விவரங்களை பள்ளிக்கல்வித்துறைக்கு சி.இ.ஓ., அலுவலகங்கள் அனுப்பியது. ஆனாலும், அந்தந்த கல்வியாண்டிற்குரிய தொகை மாணவர்களுக்கு கணக்கில் செலுத்தாமல் தாமதமானது. இந்நிலையில், மீண்டும் மாணவர்களின் வங்கி கணக்கு புள்ளிவிவரம் சேகரித்த நிலையில், 2013-14 கல்வியாண்டு வரை 3 ஆண்டுக்குரிய கல்வி ஊக்கத் தொகையை அவரவர் வங்கி கணக்கில் செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 32 மாவட்டத்திற்கு ரூ.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2011 முதல் 2014 வரை 3 ஆண்டுக்கு வட்டியோடு சேர்த்து, தகுதியான ஒவ்வொரு மாணவருக்கு தலா ரூ.5 ஆயிரத்திற்கும் மேல் கிடைக்கும் என, கல்வித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆர்.டி.இ., 'அட்மிஷன்' தராத 1,937 பள்ளிகளுக்கு 'நோட்டீஸ்!'


'இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், மாணவர்களை சேர்க்காத, 1,937 தனியார் பள்ளிகளுக்கு, செப்., முதல் வாரத்தில், 'நோட்டீஸ்' அனுப்பி, விசாரணைக்குப் பின், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை வட்டாரம், நேற்று தெரிவித்தது.

நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, இம்மாத இறுதியுடன் முடிகிறது. ஆர்.டி.இ., சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள், மாணவர் சேர்க்கை நடக்கும் வகுப்புகளில், 25 சதவீத இடங்களை, ஏழை, எளிய, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.தமிழகத்தில், 11,462 தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஆர்.டி.இ., இட ஒதுக்கீட்டின் படி, ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. ஆனால், கடந்த வார இறுதியில் எடுத்த கணக்குபடி, 89,382 இடங்களை மட்டுமே, தனியார் பள்ளிகள் வழங்கி உள்ளன. தொடக்கக் கல்வித் துறை கீழ், 7,130 பள்ளிகள் இருந்தபோதும், 5,441 பள்ளிகள் மட்டுமே, ஆர்.டி.இ., பிரிவின் கீழ், மாணவர் சேர்க்கையை நடத்தி உள்ளன. 1,689 பள்ளிகள், 'சீட்' தரவில்லை. மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தின் கீழ் உள்ள, 3,890 பள்ளிகளில், 3,642 பள்ளிகள் மட்டுமே, ஆர்.டி.இ., இடஒதுக்கீட்டின் படி, 'சீட்' அளித்துள்ளன. 248 பள்ளிகள், 'சீட்' வழங்க மறுத்துள்ளன. இரு துறைகளையும் சேர்த்து, 1,937 பள்ளிகள், 'சீட்' வழங்க மறுத்து உள்ளன. இந்த பள்ளிகள் மீது, விரைவில், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரம் கூறுகையில், 'ஆர்.டி.இ., 'அட்மிஷன்' தராத பள்ளிகளுக்கு, செப்., முதல் வாரத்தில், 'நோட்டீஸ்' அனுப்பி, விளக்கம் அளிக்க உத்தரவிடப்படும். அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், சம்பந்தபட்ட பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தது.