பிராவிடண்ட் ஃபண்டு கணக்கை (வருங்கால வைப்புநிதி) ஆன்லைனில் மாற்றும் வசதி அக்டோபர் 15-ந் தேதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஆண்டுதோறும் 13 லட்சம் சந்தாதாரர்கள் பயன் பெறுவார்கள்.
பி.எஃப். கணக்கை ஆன்லைனில் மாற்றுவதற்கான அனைத்து சோதனைகளும் முடிந்து விட்டன. இந்த திட்டத்தை எப்போது வேண்டுமானாலும் தொடங்கும் அளவிற்கு தயாராக உள்ளோம். அக்டோபர் 15-ந் தேதிக்குள் உறுதியாக இந்த வசதி நடைமுறைக்கு வரும் என சென்ட்ரல் பிராவிடண்ட் ஃபண்டு ஆணையர் கே.கே.ஜலன் தெரிவித்தார்.
டிஜிட்டல் கையொப்பம்
ஆன்லைன் வசதியை அமல்படுத்துவதற்காக தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு ஜூலை 25-ந் தேதியிலிருந்து நிறுவனங்களின் டிஜிட்டல் கையொப்பத்தை பதிவு செய்யத் தொடங்கியது. 25,000-க்கும் அதிகமான நிறுவனங்கள் டிஜிட்டல் கையொப்பத்தை பதிவு செய்துள்ளன. 500-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட நிறுவனங்களில் 80 சதவீத நிறுவனங்கள் டிஜிட்டல் கையொப்பத்தை பதிவு செய்து உள்ளன.
ஐ.டி. போன்ற தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், நிறுவனங்கள் ஏற்கனவே டிஜிட்டல் கையொப்பத்தை பயன்படுத்தி வருகின்றன. எனவே, இத்துறையில் இவ்வசதியை அறிமுகப்படுத்துவது மிகவும் எளிதாக இருக்கும். 2011-12-ஆம் ஆண்டு நிலவரப்படி 6.90 லட்சம் பி.எஃப். கணக்குகள் உள்ளன.
கணக்கு முடிப்பு
2012-13-ஆம் நிதி ஆண்டில் பி.எஃப். கணக்கை முடித்துக் கொள்ளுதல், மாற்றுதல் தொடர்பாக 1.07 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 88 சதவீத விண்ணப்பங்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 1.20 கோடி விண்ணப்பங்கள் பெறப்படும் என பி.எஃப். அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது. இதில் 13 லட்சம் விண்ணப்பங்கள் பி.எஃப். கணக்கை வேறு நிறுவனத்துக்கு மாற்றக்கோரி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப வசதிமிக்க ஐ.டி. போன்ற துறை சேர்ந்த பணியாளர்களிடமிருந்து வரும் 10 லட்சம் விண்ணப்பங்களை ஆன்லைனில் மாற்ற வருங்கால வைப்புநிதி திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment