Monday, 30 September 2013

வாக்குப்பதிவில் 49ஓ:சேவைக் கூட்டமைப்பு வரவேற்பு

வாக்குப்பதிவின்போது இயந்திரத்திலேயே யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதற்கான 49ஓ பிரிவுக்கான பதிவும் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நுகர்வோர் மற்றும் சேவை அமைப்புகளின் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

ஆங்கில வழியில் இரு இணை பிரிவுகளை தொடங்க அரசாணை வெளியிட கோரிக்கை

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 6ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி இரு இணை பிரிவுகளைத் தொடங்க அரசாணை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு, கல்வி நிறுவனங்களின் ஹிந்து நிர்வாகிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் எஸ். சுந்தரம் தலைமை வகித்தார். செயலர் எம். ராமச்சந்திரன், டி.ஆர். சுவாமிநாதன், சங்கத்தின் புரவலரும், பொருளாளருமான ஸ்ரீராமகிருஷ்ண தபோவனச் செயலர் திவ்யானந்த  மஹராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் இரண்டு இணைப் பிரிவுகள் தொடங்க தமிழக அரசு அரசாணை வழங்க வேண்டும்.
ஒரே நிர்வாகம் நடத்தும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு ஒரே அங்கீகாரமாக வழங்க வேண்டும்.
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் தொடர் அங்கீகாரத்தினை கால நீட்டிப்பு செய்து 5 ஆண்டுகளாக வழங்க வேண்டும்.
பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் பணியிடங்களை பள்ளி நிர்வாகமே நிரப்பிக் கொள்ள அரசாணையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, சங்கத்தின் செயலர் தி. வெங்கடேஷ் வரவேற்றார். முடிவில் இணைச் செயலர் என்.ஆர்.எஸ் லெட்சுமணன் நன்றி கூறினார்.

'ஹைடெக்' ஆகிறது அரசு நடுநிலைப் பள்ளிகள்!

மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில் முதற்கட்டமாக மாவட்டந்தோறும் நான்கு அரசு நடுநிலைப் பள்ளி வீதம் மாநிலம் முழுவதும் 128 பள்ளிகளைத் தேர்வு செய்து, அவற்றை இணையதளம் மூலம் இணைக்கும் திட்டத்தை தொடக்க கல்வித் துறை செயல்படுத்த உள்ளது.
தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளி மற்றும் 9 ஆயிரத்துக்கும் அதிகமான நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் புது முயற்சியாக அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தி, அனைத்து வகுப்புகளையும் அதில் ஒருங்கிணைத்து பயிலும் திட்டம் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, மாவட்டந் தோறும் நான்கு அரசு நடுநிலைப் பள்ளி வீதம் மொத்தம் 128 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு இணையதளம் மூலம் இணைக்கப்பட உள்ளது. அவ்வாறு இணைக்கப்படும் பள்ளிகளைத் தேர்வு செய்ய மாவட்டந்தோறும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக் குழுவில் அனைவருக்கும் கல்வி இயக்க (எஸ்.எஸ்.ஏ.,) மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ., மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், தலா இரு உதவி தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் ஆர்வமுடைய பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் இடம்பெறுவர்.
குழுவில் இடம்பெறும் ஆசிரியர்களுக்கு கணினி, விடியோ கான்பரன்சிங் மேற்கொள்வது போன்ற தொழில்நுட்பம் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இணையதள வசதி இருக்க வேண்டும். போதிய இட வசதி, மின் இணைப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவை அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு மாநில தொடக்க கல்வி இயக்குநர் பிறப்பித்துள்ளார்.
தவிர, அந்தந்த மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பள்ளியின் பெயர், முகவரி, கைப்பேசி விவரம் குறித்து வரும் அக்டோபர் 5-ம் தேதிக்குள் மாநில தொடக்கக் கல்வி இணை இயக்குநருக்கு (நிர்வாகம்) மின்னஞ்சல் (இ-மெயில்) செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் ராமராசு கூறியது:
தனியார் பள்ளிகளுக்கு நிகராக தொடக்கக் கல்வித் துறை முதன்முறையாக அரசு நடுநிலைப் பள்ளிகளை இணையதளம் மூலம் இணைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துதல், புதிய படைப்பாற்றல், குழுப் பணி (குரூப் டிஸ்கசன்) வளர்த்துக் கொள்ளுதல் போன்றவை இத்திட்டத்தின் நோக்கம்.
அதே வேளையில் ஆசிரியர்கள் கலந்தாலோசித்து கற்பிக்கும் பணியை மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமையும். அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் கணினி வழங்கி இணையதளம் மூலம் இணைத்தால் பள்ளி மாணவர்கள் தொடக்க கல்வி முதலே கணினி அறிவு பெற வாய்ப்பாக அமையும் என்றார்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு வழக்கின் தீர்ப்பு நாளை (அக்டோபர்-1) ஒத்திவைப்பு.

இவ்வழக்கு திங்கள்கிழமை 30தேதி காலையிலேயே 10 வது வழக்காகவிசாரணை செய்யப்பட்டது.இன்றைய வழக்கின்போது அட்வகட் ஜெனரல் ஆஜராகி மறுதேர்வு நடத்துவதில் உள்ள
சிரமங்களை எடுத்துரைத்தார் . பிழையான 40 வினாக்களை நீக்கிவிட்டு 110 வினாக்களுக்கு மதிப்பீடு செய்வது அல்லது பிழையான 40 வினாக்களுக்கும் 40 மதிப்பெண்களை அனைவருக்கும் வழங்குவது . அல்லது 110 வினாக்களுக்கு பெற்ற மதிப்பெண்களை150 க்கு கணக்கிடுவது என்று வகையான மதிப்பிட்டு முறைகளை பரிசீலிக்கும்படி வாதிட்டார்.அனைத்து தரப்பினரின் வாதத்தையும் கேட்ட விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்துவழக்கு மீண்டும் ஒத்திவைத்தார்.நாளை (அக்1)இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படலாம் என மனுதாரரின் வழக்கறிஞர் லூயிஸ் தெரிவித்தார்.

ஒரே மாதத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை 20% உயர்வு: நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு தகர்கிறது

பெட்ரோல், டீசல் விலை மற்றும் மூலப் பொருள்கள் விலை உயர்வு காரணமாக சிமெண்ட், மணல் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டுமானப் பொருள்களின் விலை, ஒரு மாதத்துக்குள் 20% அதிகரித்துள்ளது.

தொடர்ந்து உயர்ந்து வரும் கட்டுமானப் பொருள்களின் விலையால், ஒரு சதுர அடிக்கான கட்டுமான செலவு ரூ.250 வரை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வரை கட்டுமான நிறுவனங்கள் ஒரு சதுர அடி கட்டுவதற்காக வாங்கிய தொகை ரூ.1,500. தற்போது அது ரூ.1,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் சொந்த வீடு கட்டும் கனவில் வாழும் நடுத்தர மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு : முதல்வர் அறிவிப்பு:

மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது குறித்து தமிழக முதல்வர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்; பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பார்வையற்றவர்களை கொண்டு விரைவில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதனை அறிந்தவுடன், அரசு உயர் அதிகாரிகளையும், சமூக நலத் துறை அமைச்சரையும் அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். அவர்களும் இது குறித்து மூன்று கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார்கள்.இந்தச் சூழ்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் ஒரு விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதுஇந்தக் கூட்டத்தில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர், மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.அதில், படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும்இத்தேர்வில் தகுதி பெறும் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் (Backlog Vacancies) மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர்.இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கு  சிறப்புப் பயிற்சி வழங்கவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும்.முதுகலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களில் அவர்தம் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்படின் பணியமர்த்தப்படுவர்.தேசிய தகுதி தேர்வு மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 100 முதுகலைப் பட்டம் பெற்ற பார்வையற்றவர்களை தற்போது கல்லூரிகளிலுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் வரும் காலிப் பணியிடங்களில் உதவிப் பேராசிரியர்களாக பணியமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்கும்.இந்த நடவடிக்கைகள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியையும், தன்னம்பிக்கையையும் உருவாக்க வழி வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது