Monday, 30 September 2013

ஆங்கில வழியில் இரு இணை பிரிவுகளை தொடங்க அரசாணை வெளியிட கோரிக்கை

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 6ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி இரு இணை பிரிவுகளைத் தொடங்க அரசாணை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு, கல்வி நிறுவனங்களின் ஹிந்து நிர்வாகிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் எஸ். சுந்தரம் தலைமை வகித்தார். செயலர் எம். ராமச்சந்திரன், டி.ஆர். சுவாமிநாதன், சங்கத்தின் புரவலரும், பொருளாளருமான ஸ்ரீராமகிருஷ்ண தபோவனச் செயலர் திவ்யானந்த  மஹராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் இரண்டு இணைப் பிரிவுகள் தொடங்க தமிழக அரசு அரசாணை வழங்க வேண்டும்.
ஒரே நிர்வாகம் நடத்தும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு ஒரே அங்கீகாரமாக வழங்க வேண்டும்.
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் தொடர் அங்கீகாரத்தினை கால நீட்டிப்பு செய்து 5 ஆண்டுகளாக வழங்க வேண்டும்.
பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் பணியிடங்களை பள்ளி நிர்வாகமே நிரப்பிக் கொள்ள அரசாணையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, சங்கத்தின் செயலர் தி. வெங்கடேஷ் வரவேற்றார். முடிவில் இணைச் செயலர் என்.ஆர்.எஸ் லெட்சுமணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment