Tuesday, 1 October 2013

ஏ.இ.இ.ஓ.,-ஹெச்.எம்.,கள் மீது குற்றச்சாட்டு ஒரே நாளில் 44 பள்ளிக்கு விடுப்பு விவகாரம்

நாமக்கல்: சேந்தமங்கலம் பகுதியில், ஒரே நாளில், 44 பள்ளிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் தலைமையாசிரியர்கள் விதிமுறை மீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்து.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த நடுக்கோம்பை துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் நாகராஜன், கடந்த 18ம் தேதி இரவு, நெஞ்சுவலியால், உயிரிழந்தார். அதனால், சேந்தமங்கலம் யூனியனுக்கு உட்பட்ட, 44 துவக்க, நடுநிலை, உதவி பெறும் பள்ளிகளுக்கு, கடந்த, 19ம் தேதி, திங்கட்கிழமை ஒரு நாள் விடுமுறை விடப்பட்டது.
இந்த விடுமுறையை ஈடுகட்ட, 28ம் தேதி, பள்ளிகளைத் திறக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், சில பள்ளிகள் திறக்கவில்லை. இது தொடர்பாக கல்வி அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் விதிமுறை மீறி செயல்பட்டதாக, ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் முருக செல்வராஜன் கூறியதாவது:
சேந்தமங்கலம் ஒன்றியத்தில், 44 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது குறித்து, முழுமையாக விசாரிக்க வேண்டும். முதல்பருவத் தேர்வு முடிந்து விடுமுறை காலத்தில், 28ம் தேதி, பள்ளிகளை திறக்க உத்தரவிட்ட, உதவி தொடக்கக் கல்வி அலுவலரிடமும் விசாரிக்க வேண்டும்.
உள்ளூர் விடுமுறை கோரும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஏழு நாட்களுக்கு முன்னதாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில், உதவி தொடக்கக் கல்வி அலுவலரும், தலைமையாசிரியர்களும், தன்னிச்சையாக விதிமுறை மீறி செயல்பட்டுள்ளனர். விரிவான விசாரணை மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொ) பாலசுப்ரமணியன் கூறியதாவது:
சேந்தமங்கலம் பகுதியில், கடந்த, 19ம் தேதி, பள்ளிகளுக்கு விடுமுறை அனுமதி வழங்கியது குறித்து, எனக்கு நேரடியாக எவ்வித தகவலும் இல்லை. ஆனால், அதற்கு மாற்றாக, அக்டோபர் 19ம் தேதி பள்ளிகள் திறக்க அறிவுறுத்தினேன். சில பள்ளிகள் திறக்கவில்லை என்ற தகவலும் வந்துள்ளது. ஒரே நாளில் விடுப்பு அளிக்கப்பட்டது குறித்து விசாரித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment