நாடு முழுவதும் கல்விக் கடன் வழங்க ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சனிக்கிழமை தெரிவித்தார்.மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் கனரா வங்கி சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.விழாவில், 23,578 பயனாளிகளுக்கு ரூ.134.49 கோடி நலத் திட்ட உதவிகளை வழங்கி அவர் மேலும் பேசியதாவது:
2009ஆம் ஆண்டு விருதுநகர் மக்களவைத் தொகுதியில் துவக்கப்பட்ட இந்த கல்விக் கடன் வழங்கும் நிகழ்ச்சி 687 பேரிலிருந்து துவங்கி, தற்போது 15,000 மாணவர்களாக அதிகரித்துள்ளது. கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு முதல் வரிசையில் உள்ளது. இது காமராஜர் விதைத்த விதை.இந்தியா முழுவதும் கல்விக் கடன் பெறும் 4 பேரில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக உள்ளார். இதனுடைய பயன் இந்தச் சமுதாயத்துக்கு இப்போது தெரியாது. 10 அல்லது 15 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள், அரசு வங்கிகள் போன்றவற்றில் பணிக்குச் சேரும் 4 பேரில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருப்பார்.இந்தியா முழுவதும் கல்விக் கடனுக்காக ரூ.70,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.58,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது கண்ணுக்குத் தெரியாத புரட்சி.1950 மற்றும் 1960-களில் வங்கிக் கடன் பெற்றவர் யாருமில்லை. வங்கி அதிகாரிகள் யாரையும் அலைக்கழிக்காமல் வங்கிக் கடன் வழங்க வேண்டும் என்றார் சிதம்பரம்.
No comments:
Post a Comment