Friday, 11 October 2013

பி.எட்.கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வருகையை தினமும் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பவேண்டும் துணைவேந்தர் விஸ்வநாதன் பேட்டி

பி.எட். கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப்பதிவை தினமும் பல்கலைக்கழக இணையதளத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று துணைவேந்தர் பேராசிரியர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பி.எட்.படிப்புக்கு அதிக வரவேற்பு
கலை மற்றும் அறிவியல் படிப்பில் பட்டம் பெற்று ஆசிரியர் பயிற்சி படிப்பது பி.எட். என்ற படிப்பாகும். இந்த கல்லூரியை பி.எட். கல்லூரி என்றும் ஆசிரியர் கல்வியில் கல்லூரி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கல்லூரிகள் தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி கல்லூரிகள் உள்ளன. பி.எட்.படிப்புக்கு முன்பை விட தற்போது அதிக வரவேற்பு உள்ளது. காரணம் படித்து முடித்த உடன் ஆசிரியர் வாரியம் நடத்தும் ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் வேலை கிடைத்து விடுவதே ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பி.எட். கல்லூரிகள் அனைத்தும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகின்றன. மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும் தரத்தை அதிகரிக்கவும் முடிவு செய்து பி.எட். பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட பாடத்திட்டத்திற்கேற்ப புதிய பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன. இந்த புத்தகங்களை பல்வேறு நிபுணர்கள் எழுதி உள்ளனர். விரும்பும் மாணவர்கள் அவர்களுக்கு தேவையான ஆசிரியர்கள் எழுதியதை பயன்படுத்தலாம்.
புதிதாக 6 துறைகள்
பல்கலைக்கழகத்தில் புதிதாக 6 துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த துறைகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த துறைகள் ஜனவரி மாதம் முதல் செயல்படும்.
இந்த துறைகள் மூலம் ஆராய்ச்சி படிப்புகள் கற்பிக்கப்படும். ஒரு ஆசிரியருக்கு 8 பேர் மாணவர்களாக சேரலாம். மாணவர்கள் எப்போது சேரலாம் என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
மாணவர் வருகையை கண்காணிக்க தீவிரம்
அனைத்து பி.எட். கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லூரியும் தினமும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகையை ஆசிரியர் பல்கலைக்கழகம் கொடுத்துள்ள இணையதளத்திற்கு அனுப்பவேண்டும்.
இந்த முறை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment