சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கல்வி சான்றிதழ்கள் உண்மை தன்மை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சுமார் 1300 பேருடையை சான்றிதழ்கள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அதிகளவில் ஆசிரியர்கள், ஊழியர்கள் நியமனம், அனுமதி சேர்க்கைக்கு புரோக்கர்கள் மூலம் கூடுதலாக பணம் வசூலிக்கப்பட்டதால் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு ஏற்பட்டது. இதன் காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. பின்னர் தமிழகஅரசால் ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் பல்கலைக்கழக நிர்வாகியாக கடந்த ஏப்.5-ம் தேதி நியமனம் செய்யப்பட்டு, அவர் உடனடியாக பொறுப்பேற்று பல்வேறு சீரமைப்பு பணிகளையும், சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் சட்டதிருத்த மசோதா மே.16-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. சட்டத்திருத்த மசோதாவிற்கு அண்மையில் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி ஒப்புதல் அளிக்கப்பட்டதை அடுத்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுமார் 13500 ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளனர். கூடுதலாக பணியிடங்கள் நிரப்பப்பட்டதால் ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை சரி செய்ய பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு ஆசிரியர், ஊழியர்ககளுக்கு ஏப்ரல் மாதத்தில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஊழியர்களின் பணி நியமனத்தில் நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களின் சான்றிதழ்கள் பெறப்பட்டு அந்தந்த கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி உண்மை தன்மை கண்டறிந்து சான்றிதழ் வழங்குமாறு பல்கலைக்கழக நிர்வாகம் தகவல்களை அனுப்பியுள்ளது. மேலும் 8-ம் வகுப்பு பயின்றவர்கள் நேரடியாக திறந்த வெளிப்பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்று தனிஅலுவலர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணியாற்றுபவர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு அதுகுறித்தும் அரசால் நியமிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக சிதம்பரம் நகரில் உள்ள பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி,சேத்தியாத்தோப்பு பள்ளி ஆகிய பள்ளிகளில் பயின்றதாக வழங்கப்பட்ட சான்றிதழ்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவை போலியானவை என சான்று பெறப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொலைநிலை திறந்தவெளிப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்று பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்களின் சான்றிதழ்கள் உண்மை தன்மை கண்டறிய விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை 1300-க்கும் மேற்பட்டோரின் சான்றுகள் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு துணை ஒருங்கிணைப்பாளரும், ஊழியர் சங்கத் தலைவருமான சி.மதியழகன் தெரிவித்தது: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறையாக பணியில் சேர்ந்துள்ள எந்த ஒரு ஆசிரியர், ஊழியரையும் வேலையிலிருந்து நீக்குவதையும், ஊதியத்தை குறைப்பதையும் ஏற்க மாட்டோம். அப்படி நடைபெற்றால் மிகப்பெரிய போராட்டத்தில் இறங்குவோம். அதே நேரத்தில் தவறு செய்துள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு துணை போகாது, தலையிடாது என சி.மதியழகன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment