அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், மன்னர் ஜவகர், பேராசிரியர் பணியில் இருந்து, இன்று ஓய்வு பெறும் நிலையில், நேற்று முன்தினம் இரவு, அதிரடியாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடந்த, 2008 முதல், 2011 வரை, சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தராக, மன்னர் ஜவகர், பதவி வகித்தார். அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், துணைவேந்தர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, பல்கலையின், வேலை வாய்ப்பு மைய பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பணியில் இருந்து, இன்று, ஓய்வு பெற இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மன்னர் ஜவகர், சஸ்பெண்ட் செய்ததற்கான கடிதம், அவரது வீட்டில் வழங்கப்பட்டது. உங்கள் மீது, பல்வேறு புகார்கள் உள்ளன. அது தொடர்பாக, விரைவில், விசாரணை நடத்த இருப்பதால், பணியில் இருந்து, உங்களை சஸ்பெண்ட் செய்கிறோம் என, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஓய்வுபெறும் நிலையில், திடீரென, சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதை அறிந்து, மன்னர் ஜவகர், அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து, அவர் கூறுகையில், நான், எந்த தவறும் செய்யவில்லை. எல்லாவற்றையும், இறைவன் பார்த்துக் கொள்வான். எனினும், ஓய்வுபெறும் நாளில், சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது, எனக்கு, கடும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.
காரணம் என்ன? : அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நடந்த முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில், தி.மு.க., ஆட்சி காலத்தில், அண்ணா பல்கலையில் நடந்த பல முறைகேடு குறித்து, சட்டசபையில், உயர்கல்வி அமைச்சர், பழனியப்பன், பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். தி.மு.க., ஆட்சி காலத்தில், அண்ணா பல்கலையில், முறைகேடாக, 300 மாணவர், கூடுதலாக சேர்க்கப்பட்டனர். அதற்கான ஆதாரங்கள் உள்ளன என, பழனியப்பன் தெரிவித்தார். விதிமுறைக்கு மாறாக, ஏராளமான மாணவர்கள், அண்ணா பல்கலையில் சேர்க்கப்பட்டதற்கு, மன்னர் ஜவகர் தான் காரணம் என, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: இரண்டாவதாக, பல்கலைக்கு, கம்ப்யூட்டர் வாங்கியதில், பெரும் அளவிற்கு, முறைகேடு நடந்துள்ளது. மேலும், தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வந்த, தன் மனைவி, ஜூவல்சி ஜவகரை, அண்ணா பல்கலையில் உள்ள, வெளிநாட்டு உறவுகளுக்கான மையத்தில், ஆலோசகர் பதவியை வழங்கினார் என்ற குற்றச்சாட்டும், மன்னர் ஜவகர் மீது உள்ளது.
தோல்வி அடைந்த மாணவர்கள் : விதிமுறைக்கு மாறாக, இந்த நியமனத்தை செய்து, அதன் மூலம், மனைவியை, பல்வேறு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார். துணைவேந்தர் பதவியில் இருந்த கடைசி கால கட்டத்தில், பல்கலையில் நடந்த ஆசிரியர் நியமனம் மற்றும் தோல்வி அடைந்த மாணவர்கள், தேர்ச்சி பெற்ற விவகாரம் ஆகியவற்றிலும், மன்னர் ஜவகருக்கு, தொடர்பு இருக்கிறது. இவ்வாறு, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓய்வு பெறுவதற்கு முன், சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதன் மூலம், அவருக்கான ஓய்வூதிய பணப்பலன்கள் எதுவும், உடனடியாக கிடைக்காது. விசாரணை முடிந்த பிறகே கிடைக்கும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment