உபகரணங்கள் மூலம், கணித பாடத்தை எளிமையாக சொல்லி தருவதால், பல உலக தலைவர்களா லும் பாராட்டப்பட்ட ஆசிரியர், என்.உமாதாணு: நான், கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தை சேர்ந்த வன். ஏழ்மை காரண மாக, விஞ்ஞான ஆய்வக கட்டணம் கட்டக் கூட பணமின்றி, கணக்கு பாடத்தை தேர்ந்தெடுத்து படித்தேன். 'கணக்கு என்றாலே கஷ்டம்' என்ற மனநிலை தான், அன்றைய மாணவர்கள் மத்தியில் இருந்தது. எனவே, 1962 முதல், 1997 வரை என, 35 ஆண்டுகள் கணித ஆசிரியராக பணிஆற்றிய காலத்தில், மாணவர்களுக்கு கணிதத்தை எளிதில் புரிய வைக்க, பல நுணுக்கங்களை கண்டுபிடித்தேன். முன்னாள் பிரதமர் ராஜிவ், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ஐ.நா., பொதுச்செயலர் பான்-கீ -மூன் போன்ற பல உலக தலைவர்கள், என் கணித திறமையை பாராட்டியுள்ளனர். வசதியான மாணவர்கள், 'அபாகஸ்' போன்ற பயிற்சிக்கு செல்வதால், வசதியற்ற ஏழை மாணவர்களுக்கு, நான் கண்டறிந்த நுணுக்கங்களை, ஒரு சேவையாக சொல்லி தருகிறேன். 'ஜியாமெட்ரிக் பாக்சி'ல் உள்ள, 'செட் ஸ்கொயர்' எனும், மூலை மட்டங்களின் முழுமையான பயன்பாடுகளை எடுத்து கூறுவேன். கூம்பு, உள்ளீடற்ற உருளை, கோளம், அரைக்கோளம் ஆகியவற்றின் கன அளவு, வளைபரப்பு, மொத்த பரப்புகளை கண்டுபிடிக்க, கணித சூத்திரங்களை மனப்பாடம் செய்யாமல், எளிய உபகரணங்களை பயன்படுத்தி, எளிதில் கண்டுபிடிக்கலாம். கணிதத்தின், 'அல்ஜீப்ரா' பகுதியில், இருபடி கோவைகளைக் காரணிப்படுத்துதல் என்ற கணக்கு இருக்கும். இதை இரண்டே நிமிடங்களில் முடிக்க, எளிய வழி கண்டுபிடித்துள்ளேன். மற்ற முறைகளில் அதிக நேரம் ஆகும். இம்முறையை பல மாணவர்களுக்கு சொல்லி தர, பல கணித ஆசிரியர்களுக்கும் பயிற்சிஅளிக்கிறேன்.
No comments:
Post a Comment