Thursday, 31 October 2013

திருச்சி காஜாமலையைச்சேர்ந்த மாணவி சுல்தானா மரணம் குறித்த வழக்குகள் மாநில குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றம் சட்டசபையில் ஜெயலலிதா தகவல்

திருச்சி காஜாமலை பகுதியை சேர்ந்த மாணவி சுல்தானா மரணம் குறித்து, பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளும், மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்று, சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
உறுப்பினர் கோரிக்கை-ஜெயலலிதா விளக்கம்
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியதாவது:-
முதல் துணை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு பேசிய உறுப்பினர் ஜவருல்லா, திருச்சியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி தவுபிக் சுல்தானா என்ற மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு இலக்காகி அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் ரெயில்வே இருப்புப்பாதை அருகே கண்டெடுக்கப்பட்டது என்றும், அந்த வழக்கை தமிழ்நாடு அரசு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என்றும், விரைவிலே குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மாணவி சுல்தானா
திருச்சி, காஜாமலை பகுதியைச்சேர்ந்த அக்பர் பாட்சா என்பவரின் மகள் தவுபிக் சுல்தானா மேலப்புதூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம்வகுப்பு படித்து வந்தார். கடந்த 13.08.2013 அன்று பள்ளிக்கு சென்ற சுல்தானா, மாலையில் வீடு திரும்பவில்லையென, அவரது உறவினர் ஜமாலுதீன் என்பவர் 14.08.2013 அன்று அளித்த புகாரின் பேரில், பாலக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் காணாமல் போன தவுபிக் சுல்தானா ரெட்டைமலை ரெயில்வே தண்டவாளத்திற்கு அருகில் இறந்து கிடப்பதாக தகவல் தெரியவந்ததையடுத்து, காவல் துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக திருச்சி ரெயில்வே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் அவ்வழக்கு எடமலைபட்டிபுதூர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
இறப்பில் சந்தேகம்
சுல்தானாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், எதிரிகளை கைது செய்ய வேண்டும் எனவும் கோரி, த.மு.மு.க. உள்ளிட்ட முஸ்லிம் அமைப்பினர் கோரிக்கை விடுத்து 15.08.2013 அன்று 16.08.2013 ஆகிய தேதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர்.
இது தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
குற்றப்புலனாய்வு துறை விசாரணை
பின்னர், சுல்தானா குறித்து பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளும் 30.08.2013 அன்று மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு, மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறையினர் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளியில் இருந்து திரும்பிய மாணவி வழக்கப்படி வீட்டிற்கு செல்லாமல் ரெயில் பாதையில் நடந்து செல்வதை பல சாட்சிகள் கண்டுள்ளனர். புகைவண்டியில் இப்பெண் அடிப்பட்டதற்கான அறிகுறிகள் பிரேத பரிசோதனையில் காணப்பட்டுள்ளன. இது விபத்து காரணமாக ஏற்பட்டதா அல்லது தற்கொலையா அல்லது வன்முறையினால் நடைபெற்ற மரணமா என்பது புலன் விசாரணையில் இருந்து வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

No comments:

Post a Comment