Wednesday, 2 October 2013

ஹெல்ப்பேஜ் இந்தியா’ அமைப்பு சார்பில் தாத்தா, பாட்டிகளின் ஆடல், பாடலுடன் நடைபெற்ற முதியோர் தின விழா



சென்னை சேத்துப்பட்டில், ‘ஹெல்ப்பேஜ் இந்தியா’ என்ற அமைப்பு சார்பில், தாத்தா, பாட்டிகளின் ஆடல், பாடலுடன் முதியோர் தின விழா நடைபெற்றது.
முதியோர் தின விழா
இந்தியாவின் தலைநகரமான டெல்லியை தலைமையிடமாக கொண்டு தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் 37 இடங்களில் கிளை அலுவகங்கள் அமைத்து, முதியோர் காப்பகங்கள், நடமாடும் மருத்துவ மையங்கள் மற்றும் முதியோர் குழுக்கள் மூலமாக கடந்த 35 ஆண்டுகளாக இந்தியாவில் முதியோர் நிலைமை மாறுபட பாடுபட்டு வரும் அமைப்பு ‘ஹெல்ப்பேஜ் இந்தியா’ ஆகும்.
இந்த அமைப்பின் சார்பில், உலக முதியோர் தினமான நேற்று, சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஸ்ரீ குசலாம்பாள் கல்யாண மண்டபத்தில் முதியோர் தின விழா நடைபெற்றது. இந்த விழாவானது முதியோர் மற்றும் இளைய தலைமுறைகளுக்கான பந்தம் ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
சிறந்த தாத்தா, பாட்டிக்கு கிரீடம் அணிவிப்பு
விழாவில் கவர்னர் கே.ரோசய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘ஹெல்ப்பேஜ் இந்தியா’ அமைப்பிற்கு நீண்ட காலமாக உதவி புரிந்து வரும் பள்ளிகள், நிறுவனங்கள், அறக்கட்டளைகளுக்கு சமூக சேவை விருதுகளை வழங்கினார். மேலும் விழாவில் சிறந்த தாத்தாவாக தேர்வு செய்யப்பட்ட கீழ்ப்பாக்கம் மெர்சி முதியோர் இல்லத்தை சேர்ந்த பால் ஜெகதீஷ் (வயது 81) மற்றும் சிறந்த பாட்டியாக தேர்வு செய்யப்பட்ட வியாசர்பாடி டான்போஸ்கோ முதியோர் இல்லத்தை சேர்ந்த பாத்திமா(67) ஆகியோருக்கு கிரீடம் அணிவித்து கவுரவித்தார்.
முன்னதாக, விழாவை திரைப்பட இயக்குனர் வசந்த் குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்ததுடன், ‘ஹெல்ப்பேஜ் இந்தியா’ அமைப்பின் வாழ்த்து அட்டையையும் வெளியிட்டார். மேலும் டி.வி.ஆர்.பவுண்டேஷனின் செயலாளர் டி.ராஜேந்திரா விழாவில் கலந்து கொண்டு முதியோர்களுக்கான நடைபயண குச்சுகள், சக்கர நாற்காலிகள், காதுகேட்கும் எந்திரங்களை வழங்கினார்.
கலை நிகழ்ச்சிகள்
விழாவில், கொரட்டூர் பக்தவச்சலம் வித்யாஷ்ரம் மெட்ரிக்குலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், கிளாடன் குழந்தைகள் காப்பக மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும் தாத்தா, பாட்டிகளுக்கான குழு நடனம், பாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் சிறந்த தாத்தா, பாட்டிக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து 25 முதியோர் இல்லங்களை சார்ந்த முதியோர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட முதியோர்கள் அனைவரும் தங்கள் கவலைகளை மறந்து உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்.

No comments:

Post a Comment