Wednesday, 30 October 2013

டெங்கு காய்ச்சலுக்கு நில வேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு மருத்துவம் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நில வேம்பு கசாயம் மற்றும் பப்பாளி இலைச்சாறு வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காலை, மாலை நில வேம்பு கசாயம்
தற்போது மழைக்காலம் நடைபெற்றுக்கொண்டிருப்பதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் வைரஸ் காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர். இவர்களில் சிலர் டெங்கு காய்ச்சலாலும் பாதிப்படைந்துள்ளனர்.
இப்படி, வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு, தமிழக அரசு உத்தரவின்படி, அண்ணாநகரில் உள்ள அரசு சித்த மருத்துவ டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் தினமும் காலை மற்றும் மாலை 2 வேளைகளிலும் நிலவேம்பு கசாயம் மற்றும் பப்பாளி இலைச்சாறு வழங்குகின்றனர். இதனால் நோயாளிகள் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புகின்றனர்.
‘எலிசா’ முறை
அலோபதி மருந்துகளை உட்கொண்டபடியே இந்த நிலவேம்பு கசாயத்தை குடிப்பதன் மூலம் மட்டுமே விரைவான நிவாரணம் பெற முடியும். நிலவேம்பில் உள்ள மருத்துவ குணமானது வைரஸ் நோய்களை எளிதில் குணமடைய செய்கிறது.
இது குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் வே.கனகசபை கூறியதாவது:-
கடந்த ஆண்டு முதல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு என சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் ‘எலிசா’ முறைப்படி ஆய்வு மேற்கொண்டு, ‘ஐ.ஜி.எம்.’ சோதனை மேற்கொண்டு டெங்கு நோய் கண்டறியப்படுகிறது.
பிற சோதனைகள் டெங்கு இருப்பதாக தவறான தகவல்களை அளிக்க வாய்ப்பு உள்ளது. எனவே ‘எலிசா’ சோதனையே முழுமையான சோதனையாகும். டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிப்பதற்கு போதுமான அளவு ரத்தம் மற்றும் பிளேட்லெட்டுகள் மருத்துவமனையில் இருப்பு உள்ளது.
இந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்ற டாக்டர்கள் தான், மதுரை, நெல்லை மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டபோது, அங்கு சென்று டாக்டர்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர். அத்தகைய சிறந்த மருத்துவர்கள் பணிபுரிந்து வருவதால் டெங்குவுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பொதுமக்களிடையே வரவேற்பு
தற்போது மழை மற்றும் நுண் கிருமிகள் காரணமாக காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 நாட்களுக்கு பிறகுதான் டெங்கு குறித்த சோதனை செய்ய முடியும். அவ்வாறு டெங்கு நோய் கண்டறியப்பட்ட உடனேயே அவர்களுக்கு ‘சலைன்’ என்ற நரம்பு வழியாக செலுத்தப்படும் உப்பச்சத்து நிறைந்த திராவகம் கொடுக்கப்படுவதால் டெங்கு நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைந்துவிட்டது.
மேலும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உத்தரவின்படி, அரசு சித்த மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் காலை, மாலை வேளைகளில் நிலவேம்பு கசாயம் வழங்கி வருகிறார்கள். சித்த மருந்து பக்கவிளைவு இல்லாததால் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
உயிர் சேதம் இல்லை
இங்கு மொத்தம் 37 பேர் காய்ச்சலால் பாதிப்படைந்து உள்ளனர். அதில் 8 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு உள்ளது. அவர்களும் 2 அல்லது 3 நாட்களில் குணம் அடைந்து வீடு திரும்புவார்கள். கடந்த ஆண்டை போன்று, இந்த ஆண்டு டெங்கு நோயினால் எந்த ஒரு உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
டெங்கு நோயை பரப்பும், ஏ.டி.இ.எஸ். கொசு சுத்தமான நீரில் தான் உற்பத்தி ஆகிறது. எனவே டெங்கு பரவாமல் தடுக்க பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் தேங்காய் சிரட்டை, ரப்பர் டயர் போன்றவற்றை அப்புறப்படுத்துவதுடன், வீடுகளில் பயன்படுத்தப்படும் குடிநீர் பாத்திரங்களை துணியினால் கட்டி வைத்து பயன்படுத்துவதுடன், தினசரி தண்ணீர் பாத்திரங்களை சுத்தம் செய்து தண்ணீர் பிடித்து வைப்பது நல்லது.
இவ்வாறு டாக்டர் வே.கனகசபை தெரிவித்தார்.
2 பேருக்கு டெங்கு நோய்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் 37 பேர் காய்ச்சலால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் யாருக்கும் டெங்கு நோய் பாதிப்பு இல்லை என்று மருத்துவமனை டாக்டர் அமலா தெரிவித்தார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 8 பேர் காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளதாகவும், 2 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நவம்பர் 1-ந் தேதி டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மருத்துவமனையில் நடத்த உள்ளதாகவும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் குணசேகரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment