அரசு பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும், கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு மூன்று மாத சிறப்புப் பயிற்சியை, நவம்பர் மாதம் துவக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கட்டாய தேர்ச்சி, ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களால் ஒன்பதாம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்று வரும் மாணவர்கள், கல்வியில் பின்தங்கியவர்களாக உள்ளனர். இதனால்,இம்மாணவர்கள்10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.இந்த சூழ்நிலையை உணர்ந்த பள்ளிக்கல்வித்துறை தற்போது, எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பு வரும் மாணவர்களில் பின்தங்கிய மாணவர்களை தேர்வு செய்து மூன்று மாத சிறப்பு பயிற்சி வழங்க உள்ளது. இம்மாணவர்களுக்கு உதவும் வகையில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் கீழ் இணைப்பு பயிற்சி திட்டம் துவங்கப்பட்டுள்ளது.அதன்படி, நடப்பு கல்வியாண்டில் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், ஒரு லட்சம் மாணவர்களுக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.அரசு பள்ளி ஆசிரியர் பகத்சிங் கூறுகையில்,""கட்டாய தேர்ச்சியின் காரணமாக, சில மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் அடிப்படை வாசிப்பு திறன்கள் இன்றி இருப்பதுடன் கணித பாடத்தை புரிந்து கொள்ளும் தன்மையும் மோசமாக உள்ளது. இதுபோன்ற சிறப்பு பயிற்சிகள் பின்தங்கிய மாணவர்களை மேம்படுத்த இயலும்,'' என்றார்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""இப்பயிற்சி நவம்பர் மாதம் துவங்க உள்ளது. அடிப்படை மொழியறிவு, அறிவியல் அறிவு மற்றும் கணிதத்திறன் மேம்படுத்தும் வகையில் இருக்கும். ""அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்கள், ஆசிரியர்களை கொண்டு இப்பயிற்சிகள் வழங்கப்படும். இந்த சிறப்பு வகுப்புகள் பள்ளி நேரத்திலோ, பள்ளி முடிந்து மாலை நேரத்திலோ வழங்கப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment