வாக்காளர் சேர்ப்புப் பணிக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் சுடலைமணி, ராஜ்குமார், ரமேஷ் உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:
தமிழகம் முழுவதும் ஜனவரி முதல் தேதியை தகுதி நாளாகக் கொண்டு புதிய வாக்காளர் சேர்ப்புப் பணிக்கு வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் அல்லது பிற ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு தேர்தல் ஆணையம் மதிப்பூதியம் வழங்குகிறது.
தற்சமயம் 2014 ஜனவரி முதல் நாளை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் மற்றும் திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. மேலும், இப்பணி இம்மாதம் 6, 20, 27 ஆகிய மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் காலை முதல் மாலை வரை நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2012-ம் ஆண்டு புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் திருத்தப் பணிக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கும், ஜனவரி 25-ம் தேதி வாக்காளர் தினத்தன்று நடைபெற்ற முழுநேர பணிக்கும் இதுவரை மதிப்பூதியம் வழங்கப்படவில்லை.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைப் பொருத்தவரை இம்மாதம் 19, 26-ம் தேதிகளில் பள்ளிகளுக்கு முழுவேலை நாள்களாகும். 20,27-ம் தேதிகளில் புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் திருத்தப் பணிகளை மேற்கொள்வதால் 15-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இடைவிடாது விடுமுறையின்றி பணி செய்வது ஆசிரியர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும்.
எனவே, தாங்கள் மேற்கண்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இடைவிடாது பணி செய்யும் சூழ்நிலையை மாற்றி அமைக்க வேண்டும். கடந்த காலங்களில் வாக்காளர் சேர்ப்புப் பணி மற்றும் திருத்தப் பணியில் பணிபுரிந்தவர்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும். தேர்தல் காலங்களில் தேர்தல் முடிவுற்ற நாளில் மதிப்பூதியம் வழங்கப்படுவதுபோல், நிகழாண்டு வாக்காளர் சேர்ப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கு கடைசி நாளில் மதிப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment