Friday, 1 November 2013

மாணவர்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை தருவதாக கூறி ஆயிரம் மாணவர்களிடம் 200-வீதம் மோசடி

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் புதன்கிழமை உணவு இடைவேளையின் போது, பள்ளியை விட்டு வெளியே வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் மாணவர்களிடம் பேசினார்.
அப்போது, தான் கட்டடத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் இருந்து வந்துள்ளதாகவும், தங்களது வாரியத்தில் உறுப்பினராக சேரும் பெற்றோர்களின் மகன்கள் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு பயிலும் வரை மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
அந்த நபரின் பேச்சை நம்பிய மாணவர்கள், தங்களது பெற்றோர்களின் முகவரி, அலைபேசி எண்களை அவரிடம் எழுதிக் கொடுத்தனர். இதைச் சேகரித்துக் கொண்ட அந்த நபர், பெயர், முகவரி கொடுத்த மாணவர்களின் அனைத்து பெற்றோர்களிண் அலைபேசி எண்களுக்கு புதன்கிழமை இரவு பேசியுள்ளார்.
நீங்கள் உறுப்பினராகச் சேர வேண்டுமெனில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பள்ளிக்கு வெளியே ஒரு புகைப்படம், குடும்ப அட்டையின் நகல் மற்றும் இரு நூறு ரூபாய் கட்டணத்துடன் வர வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.
இதை நம்பிய மாணவர்களின் பெற்றோர்கள் பலர், அந்த மர்ம நபரை சந்தித்து ஒரு புகைப்படம்,  குடும்ப அட்டையின் நகல், இரு நூறு ரூபாயை கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், பள்ளிக்கு வெளியே நூற்றுக்கணக்கில் நின்றுகொண்டிருந்த மாணவர்களின் பெற்றோர் குவிந்துள்ளதைப் பார்த்த ஆசிரியர்கள் சந்தேகமடைந்து, தம்மம்பட்டி போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். வழக்கம் போலவே, போலீசார் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் அந்த மர்ம நபர் தனது வசூலை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.
மாணவர்களின் பெற்றோரிடம் அந்த மர்ம நபர் கொடுத்த அலைபேசி எண்ணை போலீஸார் தொடர்பு கொண்டனர். ஆனால், அந்த அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தலைமறைவான அந்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்

No comments:

Post a Comment