Sunday, 24 November 2013

கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 321 அவமதிப்பு வழக்குகள்


சென்னை ஐகோர்ட் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளையில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக 321 கோர்ட் அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. கோர்ட் உத்தரவை நிறைவேற்றியதாக அதிகாரிகள் கூறியதால் பெரும்பாலான மனுக்கள் முடிக்கப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள ஆசிரியர்களும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களும், பல்வேறு பிரச்னைக்காக சென்னை ஐகோர்ட் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளை யில் வழக்கு தாக்கல் செய்கின்றனர். அதில் பெரும்பாலான வழக்குகள் ஓய்வுக்கு பிறகு பென்சன் உள்ளிட்ட சலுகைகள் தராமல் இழுத்தடிப்பது தொடர்பானது. இந்த வழக்குகளை விசாரித்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பென்சன் பலன்களை, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்க வேண்டும் என கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிடுகின்றனர். அந்த உத்தரவுகள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்றப்படாத நிலையில், கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்குகள் தாக்கலாகின்றன. சென்னை ஐகோர்ட் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளையில் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக 321 கோர்ட் அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2011ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு இறுதி வரை ஐகோர்ட்டுகள் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாததால், இந்த கோர்ட் அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளை பொறுத்தவரை 140 இடைநிலை ஆசிரியர்கள், 102 சிறப்பு ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் 51 பேர், சிறப்பு ஆசிரியர்கள் 28 பேர் சென்னை, மதுரையில் கோர்ட் அவமதிப்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஐகோர்ட் கிளையில் பள்ளி கல்வி முதன்மை செயலாளருக்கு எதிரான 14, கோர்ட் அவமதிப்பு வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதில், பள்ளி கல்வி முதன்மை செயலாளர் சபீதா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். கோர்ட் உத்தரவை நிறைவேற்றியதாக அவர் கூறியதால், பெரும்பாலான அவமதிப்பு வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.

No comments:

Post a Comment