Monday, 18 November 2013

சிலிண்டர் மானியத்தில் குளறுபடி கொடுப்பது 435; எடுப்பது 556


நேரடி காஸ் மானிய திட்டத்தில், நுகர்வோரின் வங்கிக்கணக்கில், மானியமாக 435 கொடுத்து விட்டு, பொதுமக்களிடம் 556 கூடுதலாக பெற்று, ஒரு காஸ் சிலிண்டர் 991க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மறைமுக விலை ஏற்றம் கடுமையாக பாதிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.தேசிய அடையாள அட்டைக்கான (ஆதார்) போட்டோ எடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு சமையல் காஸ் உள்ளிட்ட திட்டங்களுக்கான மானிய தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. அரசின் நேரடி மானியம் பெறும் திட்டம் முதல்கட்டமாக தமிழகத்தில் சிவகங்கை உள்பட நாடு முழுவதும் 34 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டது.இரண்டாவது கட்டமாக தற்போது தமிழகத்தில் அரியலூர், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.

 3ம் கட்டமாக டிசம்பரில் கடலூர், பெரம்பலூர், கரூர், சேலம், தர்மபுரி, ஈரோட்டிலும், ஜனவரி 2014ல் தஞ்சாவூர், திண்டுக்கல், திருவாரூர், நாமக்கல், வேலூர், ராமநாதபுரம், விழுப்புரம், தேனி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.சமையல் காஸ் திட்டத்தில் மானியம் பெற ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. ஏற்கனவே அறிவித்தபடி கடந்த மாதம் முதல் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் காஸ் மானியம் வழங்கும் பணியை மத்திய அரசு துவக்கியுள்ளது. இதுவரை தேசிய அடையாள அட்டைக்குப் போட்டோ எடுத்தவர்கள், ஆதார் எண்ணை, வங்கிக் கணக்கு எண்ணுடன், காஸ் ஏஜென்ஸியிடம் கொடுத்தவர்களுக்கு தற்போது காஸ் மானியம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

இதன் மூலம், காஸ் சிலிண்டர் கேட்டு நுகர்வோர் பதிவு செய்த மூன்று நாள் கழித்து காஸ் சிலிண்டருக்கான மானியம் 435 நுகர்வோரின் வங்கிக் கணக்கில் போடப்பட்டு விட்டதாக நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கு தகவல் வந்து விடுகிறது. பின் குறிப்பிட்ட நாளில் காஸ் சிலிண்டர் வீட்டு வருகிறது. அப்போது காஸ் சிலிண்டருக்கான பில்லில் 991 என குறிப்பிட்டு, இந்த தொகையை ஏஜென்ஸி ஊழியர் பெறுகிறார்.இதுவரை பொதுமக்கள் வீட்டு உபயோகத்துக்கான காஸ் சிலிண்டர் பெற பில் தொகையாக 401 மட்டும் செலுத்தி வந்தனர். சிலிண்டருக்கான மானியத்தை அரசே எண்ணெய் நிறுவனத்துக்கு கொடுத்து வந்தது. இதனால் அரசு மானியம் எவ்வளவு கொடுக்கிறது என பொதுமக்களுக்கு தெரியாது.

தற்போது நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் மானியத்தொகை 435 வங்கியில் செலுத்தி விடுகிறது. இதனால் அந்த பணத்துடன், பொதுமக்கள் தங்கள் சொந்த பணமாக 556 சேர்த்து ஒரு காஸ் சிலிண்டர் பெற 991 செலுத்த வேண்டியுள்ளது.நேரடி மானியம் மூலம் மறைமுகமாக காஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 401க்கு விற்கப்படும் காஸ் சிலிண்டரை 556க்கு வாங்க வேண்டி உள்ளது. குறைந்த மானியத்தை கொடுத்து விட்டு அதிகமான விலையில் காஸ் சிலிண்டர் விற்கப்படுவதாக பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். பழைய நிலையே நீடிக்கவேண்டும். இல்லாவிட்டால் மானியத்துடன் சேர்த்து குறைந்த விலைக்கு கொடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

விலை மாற்றத்துக்கு ஏற்ப மானியமும் மாறுமா?
மானிய விலையில் விற்கப்படும் சமையல் காஸ் சிலிண்டரின் விலை மதுரையில் 401 ஆகும். ஆனால், மானியமில்லாத சிலிண்டரின் விலை 991. இதன்படி ஆதார் எண்ணை பதிவு செய்துள்ளவர்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு 590 மானியமாக வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட வேண்டும். ஆனால், 435 மட்டுமே டெபாசிட் செய்யப்படுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 155ஐ கூடுதலாக செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு பொதுமக்கள் ஆளாகி உள்ளனர். இதன்படி ஆதார் எண் பதிவு செய்தவர்கள், 556க்கு காஸ் சிலிண்டரை வாங்குகின்றனர். மானியமில்லா சிலிண்டரின் விலை மாற்றத்துக்கு ஏற்ப வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் மானிய தொகையிலும் மாற்றம் செய்தால் இந்த பிரச்னைக்கு தீர்வு காணமுடியும்.

No comments:

Post a Comment