Thursday, 28 November 2013

6.64 லட்சம் பேர் எழுதும் குரூப் 2 தேர்வு: அனைத்து முன்னேற்பாடுகளும் திருப்தி

தமிழகத்தில் வரும் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 2 தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வணிகவரி துணை ஆணையாளர், சார் பதிவாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் போன்ற முக்கிய பதவிகளுக்கான குரூப் 2 தேர்வு டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுகள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் கண்காணிப்பில் நடத்தப்படுகின்றன.
இதற்கான ஆயத்தப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து காணொலி காட்சி முறையின்மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் அவர் கேட்டறிந்தார். இதையடுத்து அவர் கூறியது: குரூப் 2 பிரிவில் காலியாகவுள்ள ஆயிரத்து 64 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் 1 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்காக 6 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியான 6 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கான ஹால் டிக்கெட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுக்கான ஏற்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் நவநீதகிருஷ்ணன்.

No comments:

Post a Comment