Thursday, 7 November 2013

தென்மாவட்ட அங்கன்வாடிகளில் சாதிய பாகுபாடு அதிகம் ஆய்வில் அதிர்ச்சிகர தகவல்

அங்கன்வாடி மையங் களில் சாதிய பாகுபாடு தென்மாவட் டங்களில் அதிகமாக இருப்பதாக தோழமை அமைப்பின் இயக்குநர் அ.தேவநேயன் கூறினார்.
தமிழக அங்கன்வாடி மையங்களின் உண்மை நிலை மற்றும் பிரச்சனைகள் குறித்த ஆய்வறிக்கை வெளியீடு மற்றும் மதுரை மண்டல அளவிலான கருத்தரங்கம் தோழமை அமைப்பின் சார்பில் புதனன்று நடைபெற்றது. இதன் பின் செய்தியாளர்களிடம் அ.தேவநேயன் கூறியதாவது: இந்தியாவில் உள்ள 6 வயதுக்குட்பட்ட அனைத்து முன்பருவக் குழந்தைகளும் ஆரம்பகால கல்வியும், ஆரம்ப கால பராமரிப்பும் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் 1975 ஆம் ஆண்டு மத்திய அரசால் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் கொண்டு வரப்பட்டது. 60 சதவீத மத்திய அரசின் நிதியும், 40 சதவீத மாநில அரசின் நிதியிலும்இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களின் நிலைமை குறித்து கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மூன்று குழந்தைகளுக்கு 2 குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கடந்த ஜுன் 12 ம் தேதி கூறினார். நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் 50 சதவீதமான குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மையங்களில் 97 சதவீதம் ஒடுக்கப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகள் வருகின்றன. 40 முதல் 50 சதவீத அங்கன்வாடி மையங்கள் நண்பகலுக்கு மேல் இயங்கவில்லை. மத்திய,மாநில அரசு ஒதுக்கியுள்ள நிதியில் ஒரு குழந்தைக்கு 26 பைசா செலவழிக்கப்படுகிறது.
இந்த நிதியில் குழந்தைகளுக்கு எப்படி ஊட்டச்சத்து கிடைக்கும்? 75 சதவீத மையங்களில் மின்சார வசதி கிடையாது. 520 சதுரஅடியில் அங்கன்வாடி மையங்கள் இருக்க வேண்டும் என்ற விதியை மீறி சென்னை மாதிரி பெருநகரங்களில் 158 சதுர அடியில் அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த இடத்தில் தான் சமையல் கூடமும் உள்ளது. இந்த மையங்களில் 5 பணியாளர்கள் இருந்தநிலையில் தற்போது 2 பேர் தான்உள்ளனர். இவர்கள் 32 ரிக்கார்டுகளை பராமரிக்க வேண்டியுள்ளது. ஆபத்தான நிலையில், இடியும்நிலையிலும், கழிவு நீர் தேங்கியஇடங்களிலும் அங்கன்வாடி மையங்கள் பல செயல்பட்டு வருகின்றன. அரசின் நலத்திட்டங்களுக்கு வழங்கப்படும் சிமிண்ட்,சைக்கிள் போன்றவையும், கடலோர மாவட்டங்களில் வலைகள் வைக்கும் இடமாகவும் அங்கன்வாடி மையங்கள் உள்ளன. சாதியப்பாகுபாடுடன் பலஇடங்களில் அங்கன்வாடி மையங்கள் வைப்பதற்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது. வடமாவட்டங்களை விட தென் மாவட்டங்களில் இது கூடுதலாக இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 56 சதவீத அங்கன்வாடி மையங்களில் மேற்கூரை இல்லை. 48 சதவீத மையங்கள் தனியார் கட்டிடத்தில் இயங்குகின்றன.
64 சதவீத மையங்கள் போதுமான இடவசதியின்றி இயங்குகின்றன. தேனியில் 40 சதவீத மையங்கள் குழந்தைகள் அணுகும் தூரத்தில் இல்லை. 47.7 சதவீத மையங்களில் மேற்கூரை இல்லை. 60 சதவீத மையங்களில் காற்றோட்ட வசதியில்லை. 73.3 சதவீத மையங்களில் கழிப்பறை வசதி முழுமையாக இல்லை. 60 சதவீத மையங்களில் குழந்தைகள் உபயோகிக்கும் உபகரணங்கள் இல்லை. இராமநாதபுரத்தில் 50 சதவீத மையங்களில் உகந்த இடத்தில் அமைக்கப்படவில்லை. 65 சதவீத மையங்களில் மின்வசதி இல்லை. 62 சதவீத மையங்களில் விறகடுப்பு மூலம் அங்கன்வாடி மையங்களுக்குள்ளேயே சமையல் நடைபெறுகிறது.
இப்பிரச்சனைகள் தொடர்பாக ஏற்கனவே தமிழக தலைமைச்செயலாளரிடம் மனு கொடுத்துள்ளோம்.ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளை திட்டதில் இருந்து மாற்றி சட்டமாக கொண்டு வரவேண்டும். அங்கன்வாடி மையங்களை செயல்படுத்தும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு தேவையான அனைத்து நிதியையும் மத்திய அரசே வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்கள், பஞ்சாயத்து அமைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும். அனைத்து அங்கன்வாடி மையங்களும், அங்கன்வாடிக்கென்று கட்டப்பட்ட அனைத்து வசதிகளும் கொண்டஅரசு கட்டிடங்களில் மட்டுமே செயல்பட வேண்டும். இந்தகோரிக்கைகளை வலியுறுத்திதில்லியில் சட்டப்பல்கலைக்கழகத்துடன் இணைந்து சட்டமியற்ற வலியுறுத்தி கருத்தரங்கம் நடத்த உள்ளோம். தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment