Friday, 22 November 2013

சுற்றுலா அழைத்துச்சென்றபோது மாணவி பலி: பள்ளி தலைமை ஆசிரியர் இடைநீக்கம் முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை

சுற்றுலா அழைத்துச்சென்றபோது மாணவி பலி:
பள்ளி தலைமை ஆசிரியர் இடைநீக்கம்


சுற்றுலா அழைத்துச்சென்றபோது மினிடோர் வேன் கவிழ்ந்து மாணவி பலியான சம்பவத்தில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவிலுக்கு சுற்றுலா

கோவை அருகே உள்ள தீத்திப்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 227 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளி உதவி தலைமை ஆசிரியரான ரகோத்தமன், தலைமை ஆசிரியர் பொறுப்பையும் கவனித்து வருகிறார்.

இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள், 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அய்யாசாமி மலைக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இதில் 120 மாணவ-மாணவிகள் சுற்றுலா சென்றனர். அவர்களுடன் ஆசிரியர்களும் சென்றனர். கோவிலுக்கு சென்றுவிட்டு மாணவர்கள் வீட்டுக்கு நடந்து வந்தனர்.

வேன் கவிழ்ந்து மாணவி பலி

அப்போது ஏராளமான மாணவிகளை 3 சக்கர சரக்கு ஆட்டோவில் ஆசிரியர்கள் ஏற்றி அனுப்பினார்கள். பள்ளிக்கூட ஆயா மணிமேகலையும் உடன் சென்றார். சரக்கு ஆட்டோ வேகமாக வந்தபோது 7 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் இருந்த மாணவி ரஞ்சிதா (வயது 12) சம்பவ இடத்திலேயே பலியானார்.

அத்துடன் அதில் இருந்த 23 மாணவிகள் மற்றும் பள்ளிக்கூட ஆயா மணிமேகலை ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்தையொட்டி சரக்கு ஆட்டோவை ஓட்டிய டிரைவர் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரான ரகோத்தமனை இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி ஞானகவுரி நடவடிக்கை எடுத்து உள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆசிரியர் இடைநீக்கம்

பள்ளியில் படிக்கும் மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்ல வேண்டும் என்றால் முதலில் கல்வித்துறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும். பின்னர் அந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் அனுமதி பெற வேண்டும். இதில் மாணவர்களின் பெற்றோர்களிடம் மட்டுமே அனுமதி வாங்கி உள்ளனர். ஆனால் கல்வித்துறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கவில்லை.

மேலும் மாணவிகளை சரக்கு வாகனங்களில் அனுப்பி வைத்தது பெரிய தவறாகும். அதனால்தான் இந்த விபத்து நடந்து உள்ளது. எனவே அந்த பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பை கவனித்து வரும் உதவி தலைமை ஆசிரியர் ரகோத்தமன் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அந்த பள்ளிக்கு நாளை (இன்று) வரை 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்லும்போது 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் உடன் செல்ல வேண்டும். சுற்றுலா அழைத்துச்செல்வது சம்பந்தப்பட்ட பாடம் சம்பந்தமாக இருக்க வேண்டும். அவர்கள் செல்லும் வாகனங்கள் நன்றாக இருக்கிறதா, அதை ஓட்டும் டிரைவருக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என்று பார்த்து அழைத்துச்செல்ல வேண்டும்.

மேலும் ஆபத்து நிறைந்த இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச்செல்வதை தவிர்க்க வேண்டும். மாணவர்களை பத்திரமாக அழைத்துச்சென்று, பத்திரமாக அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைப்பது ஒவ்வொரு ஆசிரியர்களின் கடமை ஆகும். இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment