உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில், கட்டாய வசூல் கொடிகட்டி பறப்பதால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தொடக்கக்கல்வித்துறையின் கீழ் வரும், நடுநிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம், நிலுவை மற்றும் ஆய்வுப்பணிகளுக்காக, ஒவ்வொரு ஒன்றியத்திலும், உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில், ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒன்று அல்லது இரண்டு உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், அலுவலக கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன.
அந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும், சம்பள பில், நிலுவைத்தொகை, கடன் உள்ளிட்டவைகளுக்கு, உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் உள்ள பணியாளர்களின் தயவு மிகவும் அவசியமாகிறது. இவர்களை பகைத்துக்கொள்ளும் ஆசிரியர்களின் பில்களை வேண்டும் என்றே தவறாக எழுதி, சம்பளம் பெற முடியாமல் செய்வது, நிலுவைத்தொகை பில்களை தாமதப்படுத்துவது உள்ளிட்ட எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதால், ஆசிரியர்கள் எதிர்ப்பு காட்டுவதில்லை.
மாறாக, இவர்களின் பணியையும் சில ஆசிரியர்கள் பள்ளி வேலைநேரம் முடிந்து வந்து, செய்து கொடுத்தும், "காக்கா' பிடிக்கின்றனர். இந்நிலையில், பெரும்பாலான உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில், தீபாவளி வாரத்தில், ஒவ்வொரு ஆசிரியரிடம் இருந்தும் கட்டாய வசூல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
இந்த ஆண்டு தீபாவளி, 2ம் தேதியே வருவதால், சம்பள பில் சரியான தேதியில் சமர்பித்தால் மட்டுமே, சம்பளத்தை, 1ம் தேதி பெற முடியும். இதற்காக ஆசிரியர்களிடம், 100 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை, கட்டாய வசூல் நடத்தப்படுகிறது. இதுமட்டுமில்லாமல், தீபாவளி போனஸ் என்ற போர்வையில், பலவித வசூல்களும் நடத்தப்படுகிறது.
உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களும், உதவி பெறும் பள்ளிகளிலும், நர்ஷரி பள்ளிகளில் தங்கள் பங்குக்கு வசூலில் இறங்கியுள்ளனர். தாரமங்கலம் ஒன்றியத்தில், லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம், ஒரு அலுவலர் கையும், களவுமாக சிக்கியும் கூட, மற்ற ஒன்றியங்களில், இந்த லஞ்ச வேட்டை சிறிதும் குறையவில்லை.
பெரும்பாலான ஆசிரியர்களும், தங்களுக்கு உரிய காலத்தில், பண்டிகை முன்பணம், சம்பளம், நிலுவை, கடன் உள்ளிட்டவை கிடைக்க வேண்டும் என்பதற்காக, பணம் தரவும் தயங்குவதில்லை.
இதனால், உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும், இளநிலை உதவியாளர் கூட, பல லட்ச ரூபாய் வரை வசூல் செய்யும் நிலை உள்ளது. இவற்றை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரோ, மற்ற உயர் அதிகாரிளோ சிறிதும் கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கும் உரிய பங்கு சென்றுவிடுவதாக புகார் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment