உலகளவில் இந்தியாவில்தான் அதிகளவில் குழந்தை திருமணம் நடப்பதாக ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. 18 வயது நிறைவடையாத ஒரு பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஒரு ஆணுக்கும், திருமணம் நடத்தி வைப்பது தான் குழந்தை திருமணம். இந்தியாவில் குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் நடைமுறை யில் இருந்தாலும் மாநிலம் முழுவதும் ஏதாவது ஒரு மூலையில் குழந்தை திருமணம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பெரும் பாலும் கிராமபுறங்களில் தான் இது அதிகளவில் அரங்கேறி வருகிறது.கிராமங்களில் வாழும் பெண்கள் குடும்ப வறுமை, ஆணாதிக்கம், அடிமைத்தனம், ஆகிய காரணங்களினால் கட்டாய குழந்தை திருமணத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஒரு சில ஊர்களில் சமுதாய ரீதியாகவும் பெண்களுக்கு குழந்தை திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. பெரும்பாலான கிராமங்களில் பெண்கள் பருவத் துக்கு வந்ததும், திருமணம் செய்து வைக்க பெற்றோர் அவசரப்படுகின்றனர். மாறி வரும் சமூகத்தில் நடக்கும் பாலியல் கொடூரங்களை கண்டு பயந்துதான் குழந்தைகளின் பெற்றோர் இதுபோன்ற அவசர முடிவு எடுக்கின்றனர்.
அதற்காக 15 வயதுக்குள் பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதால், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குழந்தை திருமணத்தால் பெண்கள் வறுமை, பாலியல் தொல்லை போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் திருமணம் செய்து கொள்வதால் சிறுவயதிலே கருவுறுதல், கருச்சிதைவு ஆகிய பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் 15 முதல் 19 வயது வரை உள்ள பெண்கள் கர்ப்பம் தரித்தல், பிரசவத்தின் போது ஏற்படும் பிரச்னைகளால் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இந்தியாவில் அதிகப்படியாக 45 சதவீதம் குழந்தை திருமணம் நடப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது. அதேபோல் வடமாநிலங்களில் 40 சதவீதமும் தமிழகத்தில், 45 சதவீதமும் குழந்தை திருமணம் நடக்கிறது.
தமிழகத்தில் குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் 40 சதவீதம் குழந்தை திருமணம் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 15 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. உலகளவில் 20 நிமிடத்திற்கு 20 குழந்தை திருமணம் நடக்கிறது.குழந்தை திருமணம் புதிய தடுப்பு சட்டத்தை மத்திய அரசு 2006ம் ஆண்டு கொண்டு வந்தது. ஆனால் இன்று வரை இந்த சட்டம் பற்றி மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. குழந்தை திருமணம் சட்டம் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் தான் குழந்தை திருமணத்தை முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குழந்தை திருமணத்தால் பெரும்பாலான பெண்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் குழந்தைகளின் அடிப்படை உரிமை, சுதந்திரம் ஆகியவை மறுக்கப்படுகிறது. போதாக்குறைக்கு குழந்தை தொழிலாளர்கள் முறையும் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு சட்டம் 1986ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த சட்டமும் பெயரளவில் தான் நடைமுறையில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் நாடு முழுவதும் குழந்தை தொழிலாளர்களும் அதிகரித்து கொண்டிருக்கிறார்கள்.
ஒட்டு மொத்தமாக 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமுதாயத்தால் இதுபோன்ற பல்வேறு துன்பங்களை சந்திக்க நேரிடுகிறது. இதன் விளைவாக தேசிய அளவில் ஆரம்ப கல்வி நிலையில் 40 சதவீதம் இடைநிறுத்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் குழந்தைகள் கொலையும் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்டத்தை பெயரளவில் நடைமுறைபடுத்துவதை விட்டுவிட்டு அனைத்து கிராமங்களிலும் குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே இனி வரும் காலங்களில் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். எனவே குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இதுபோன்று சட்டங்களை அரசு மறுபரிசீலனை செய்து கடுமையான முறையில் நடைமுறைபடுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment