.திருச்சி,பாலக்கரை சையது முர்துஷா பள்ளி சுற்றுச்சுவரை சுற்றிலும் ஆபாச மற்றும் சினிமா படங்களின் சுவரொட்டிகள் ஆக்கிரமித்துள்ளதால் பள்ளி மாணவ, மாணவியர் முகம் சுழித்துக் கொண்டே பாடம் கற்கச்செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.திருச்சி, பாலக்கரை பகுதியில் பழமை வாய்ந்த சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் பிள்ளைகள் இப்பள்ளியில் தான் படிக்கின்றனர்.இப்பள்ளி காம்பவுன்ட் சுவரை சுற்றிலும் ஆபாச, சினிமா மற்றும் நடிகர் சங்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இவற்றை பார்த்துக்கொண்டே பள்ளி மாணவ, மாணவியர் பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவலம் உள்ளது. இந்த சுவரொட்டிகள் பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.அதேவேளையில், சிறிது தூரத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் காம்பவுன்ட் சுற்றுச்சுவர் சுத்தமாக பளீச்சென்று உள்ளது. இந்த வழியாகத்தான் தற்போது பதவி வகிப்பவர் உட்பட இதுவரை பதவி வகித்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இப்பள்ளியை கடந்து தான் தங்கள் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அருகே உள்ள இப்பள்ளியைகூட மாவட்ட கல்வித்துறையால் சுத்தமாக, தூய்மையாக வைத்துக்கொள்ள முடியாவிட்டால், மற்ற பள்ளிகளின் நிலை பற்றி கேட்கவே வேண்டாம்.பள்ளி சுற்றுச்சுவரையொட்டி வேன், டாக்ஸி போன்றவை நிறுத்துவதால் தான் இதுபோன்ற ஆபாச சுவரொட்டிகள் சுவற்றை அலங்கரிக்கின்றன. வேன், ஆட்டோ, டாக்ஸி போன்றவற்றை வேறு பகுதிக்கு இடமாற்றி, அங்கு சாலையோர பூங்கா அமைத்து பராமரித்தால் பார்க்க அழகாகவும் இருக்கும்; சுவரை பாதுகாத்தது போலவும் இருக்கும். தேவையற்ற போக்குவரத்து நெரிசலையும் குறைக்கலாம்.
No comments:
Post a Comment