"அறிவியல் விழிப்புணர்வு கண்காட்சிகளை நடத்தும் கல்வி
நிறுவனங்கள், சிறப்பான கட்டுரை எழுதும் மாணவர்களுக்கு, தேசிய அறிவியல் தொழில்நுட்ப, தொடர்பியல் கூட்டமைப்பு ரூ. ஒரு லட்சம் வரை பரிசு வழங்குகிறது,'' என, அதன் இயக்குனர் மனோஜ்குமார் பட்டோரியா தெரிவித்தார்.
நாட்டுப்புற கலைகள் மூலம் அறிவியல் செய்திகளை மாணவர்கள், பொதுமக்களுக்கு ஆசிரியர்கள் எவ்வாறு கொண்டு செல்வது குறித்த பயிற்சி பட்டறை, மதுரை யாதவர் கல்லூரியில் நடந்தது. முதல்வர் ரத்னகுமார் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நவராஜ் வரவேற்றார். தேசிய அறிவியல் தொழில்நுட்ப, தொடர்பியல் கூட்டமைப்பு இயக்குனர் மனோஜ்குமார் பட்டோரியா பேசியதாவது:
இந்தியா அறிவியல் வளர்ச்சியால் வேகமாக வளர்ந்து வந்தாலும் அடிப்படை அறிவியல் வளர்ச்சி இல்லை. மாணவர்கள் கம்ப்யூட்டர் இன்ஜினியர் பாடங்களை படிக்க ஆர்வம் செலுத்துகின்றனரே தவிர, அறிவியல், ஆராய்ச்சியில் ஈடுபட மறுக்கின்றனர். அறிவியல் சம்பந்தமான தகவல்களை மக்களிடம் சேர்ப்பதில் நிறைய சவால்கள் உள்ளன.
பள்ளி, கல்லூரிகளில் அறிவியல் கல்வி சம்பந்தப்பட்ட வகுப்புகளை அதிகம் துவக்க வேண்டும். சர்வதேச நிறுவனங்கள் இணைந்து இதுபோன்ற பயிற்சி பட்டறைகளை நடத்த வேண்டும், என்றார்.
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது: நாட்டில் உற்பத்தி திறனை அதிகரிக்க, அனைத்திலும் ரசாயன உரங்கள் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் மண் வளம், மனித இனம் பாதிக்கப்படுகிறது. இயற்கை உரத்தால் விளையும் காய்கறிகள், பழங்கள் உடலுக்கு ஏற்றது. ரசாயன உரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்கள் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்றாலும், அதிக விளைச்சல் பெற வேண்டும் என்பதற்காக அதையே நாடுகின்றனர். இளைஞர்கள் "பாஸ்ட் புட்' என்ற பெயரில் கொழுப்பு சத்துள்ள உணவு வகைகளையே அதிகம் சாப்பிடுகின்றனர். இதனால் நரம்பு தளர்ச்சி, உடல் பருமன் ஏற்படுகிறது. இந்நிலை நீடித்தால், அடுத்த தலைமுறையினர் குள்ள மனிதர்களாக பிறக்கும் பரிதாப நிலை ஏற்படும். ரசாயன உரங்களை தெளிப்பதால், வேளாண்மை மற்றும் மனிதர்களுக்கு நன்மை பயக்கும் பூச்சி இனங்களும் அழிக்கப்படுகின்றன, என்றார்.
No comments:
Post a Comment