சமையல் கியாஸ் மானியம் அனைவருக்கும் தொடரும், ஆதார் அட்டை ஒரு பிரச்சினை அல்ல என்று இந்திய எண்ணெய் கழகம் அறிவித்துள்ளது.
ஆதார் அட்டை
அரசின் சேவைகள், மானியங்கள், சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் ஆக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், ஆதார் அட்டைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, அரசின் மானியங்கள். சலுகைகள், சேவைகள் போன்றவற்றை பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டையை கட்டாயம் ஆக்கக்கூடாது என நீதிபதிகள் பி.எஸ். சவுகான், எஸ்.ஏ.பாப்டே உத்தரவிட்டனர்.
இது மத்திய அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி எண்ணெய் கம்பெனிகள் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளன.
முதல்-மந்திரி அதிர்ச்சி
இந்த நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தா, ஹவுரா, கூச்பெஹார் மாவட்டங்களில், சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தையும், ஆதார் அட்டையையும் தொடர்புபடுத்தி (ஆதார் அட்டை இருந்தால்தான் சமையல் கியாஸ் சிலிண்டர்களை மானிய விலையில் பெற முடியும் என குறிப்பிட்டு) பத்திரிகைகளில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இவை மக்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் அதிர்ச்சி வெளியிட்டார். மாநிலத்தில் 15-20 சதவீத நுகர்வோர்கள் மட்டுமே ஆதார் அட்டை பெற்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அனைவருக்கும் மானியம்
இதுகுறித்து இந்திய எண்ணெய் கழகத்தின் செயல் இயக்குனர் ஆந்திரஜித் போஸ் கூறியதாவது:-
ஆதார் அட்டை பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், பெறாத வாடிக்கையாளர்கள் என பாராது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சமையல் கியாஸ் மானியம் வழங்குவது தொடரும்.
ஆதார் அட்டை பெறாதவர்களுக்கு சமையல் கியாஸ் மானியம் இன்றுமுதல் (நேற்று) ரத்தாகி விடும் என்று அஞ்சத்தேவை இல்லை. அது உண்மை அல்ல.
ஆனால் ஆதார் அட்டை பெறாத சமையல் கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு மானியம் அடுத்த 3 மாதங்களுக்கு மட்டுமே தொடரும்.
கட்டாயம் ஆக்கப்படுகிறது
ஏற்கனவே ஆதார் அட்டை பெற்றவர்கள், தங்களது ஆதார் எண்ணை சமையல் கியாஸ் வினியோகஸ்தர், வங்கிகளுடன் (நேரடி ரொக்க மானியத்துக்கு) பதிவு செய்திருந்தால், அவர்கள் கட்டாயமாக புதிய முறைக்கு மாறிவிடுவார்கள். அதாவது, இவர்கள் கியாஸ் சிலிண்டர்களை வெளிச்சந்தை விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டும். சிலிண்டர்களுக்கான மானியம் ரொக்கமாக அவர்கள் வங்கிக்கணக்கில் நேரடியாக சேர்க்கப்பட்டு விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment