வேலூர் மாவட்டத்தில் வருகிற எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வில் 90 சதவீதம் தேர்ச்சி பெற அனைவரும் உழைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் நந்தகோபால் உத்தரவிட்டார்.
ஆலோசனை கூட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் நந்தகோபால் தலைமையில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். இதில் அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலர்கள், கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் நந்தகோபால் பேசுகையில் கூறியதாவது:–
குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும். வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர்கள் இருந்தால் அவர்களை கண்டுபிடித்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் சிலர் செல்லாமல் இருந்தால் கல்வித்துறை எப்படி வளரும். எனவே, அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு நேரத்துக்கு செல்ல வேண்டும்.
90 சதவீதம் தேர்ச்சி
மாவட்டத்தில் கல்வித்துறை எப்படி என்பதை எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வின் தேர்ச்சி விகிதம் கூறுகிறது. நமது மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. நிறைய பேர் வேலை செய்கிறோம் என்று கூறுகின்றனர். ஆனால் அதற்கு முடிவு இருக்க வேண்டும். அப்போதுதான் வேலை செய்வதற்கான பலன் கிடைக்கும். நாம் இன்னும் முன்னேற வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வில் 90 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கான இலக்கு நிர்ணயித்து கல்வித்துறை அதிகாரிகள் அனைவரும் உழைக்க வேண்டும். பள்ளிகளில் கட்டிடம், வளர்ச்சி, அடிப்படை வசதிகள் குறித்து அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி பேசியதாவது:–
பயிற்சிகள்
வேலூர் மாவட்டத்தில் இந்த காலாண்டு தேர்வில் எஸ்.எஸ்.எல்.சி.யில் 67 சதவீதமும், பிளஸ்–2 வில் 76 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 90 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெறுவதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அரையாண்டு தேர்வு முடிந்தவுடன் மீண்டும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். வருகிற 23–ந் தேதி அனைத்து மாணவ– மாணவிகளுக்கும் அடுத்த பருவத்துக்கான நோட்டு, புத்தகம், குறிப்பேடுகள் வழங்கப்படும். வேலூர் மாவட்டத்தில் வருகிற பொதுத்தேர்வில் 90 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெறுவோம் என்று உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment