கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் பல ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் விடைத்தாள் நகல் கேட்டு 40 ஆயிரம் மாணவ மாணவியர் விண்ணப்பித்தனர். பலர் சரியான விடைகள் எழுதியிருந்தும் உரிய மதிப்பெண்கள் வழங்காமல் விட்டது விடைத்தாள் நகல் மூலம் தெரியவந்தது. இதையடுத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மறு மதிப்பீடு செய்ய வும், மறு கூட்டல் செய்யவும் விண்ணப்பித்தனர். அதில் பல மாணவர்களுக்கு அதிபட்சமாக 10 முதல் 25 மதிப்பெண்கள் கிடைத்தன.
இந்த பணிகள் நடந்து முடிந்து மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்கள் ஆகஸ்ட் மாதம்தான் கிடைத்தது. அதற்குள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கவுன்சலிங் நடந்து முடிந்தன. இதனால் மேற்கண்ட பிரச்னையில் சிக்கிய மாணவ மாணவியர் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து குறிப்பிட்ட சில பாடத் தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்திய சுமார் 110 ஆசிரியர்களை தேர்வுத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்தனர். 24ம் தேதி 50 ஆசிரியர்கள் தேர்வுத்துறைக்கு வந்தனர். அதைத் தொடர்ந்து நேற்றும் 60 ஆசிரியர்கள் தேர்வுத்துறைக்கு வந்தனர். அவர்களிடம் விசாரணை நடந்தது.
மாணவர்களின் விடைத்தாள்களை எடுத்து வந்து திருத்திய ஆசிரியர்களிடம் காட்டிய தேர்வுத்துறை அதிகாரிகள் அதில் செய்திருந்த தவறுகளை சுட்டிக் காட்டினர். மேலும் எப்படி இது போன்ற தவறுகள் நடந்தது என்றும் கேள்வி எழுப்பியதுடன் ஆசிரியர்களிடம் எழுதி வாங்கினர். இதையடுத்து மேற்கண்ட 110 ஆசிரியகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வி இயக்குநருக்கு பரிந்துரை செய்கின்றனர். அதன் மீது 17பி மெமோ வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment