Wednesday, 25 December 2013

பணிநிரவல்: கலக்கத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்

தமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் "சர்பிளஸ்' ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய கல்வித் துறை நடவடிக்கை எடுக்கிறது. ரூ.பல லட்சங்களை கொட்டி பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 160 மாணவர்களுக்கு 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் பணியில் நியமிக்கலாம். பின், ஒவ்வொரு 30 மாணவர்களுக்கும் ஓர் ஆசிரியர் வீதம் கூடுதலாக நியமிக்கலாம். இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனங்கள் இருக்க வேண்டும். மாநில அளவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1.8.2013ன் படி ஆசிரியர்கள், மாணவர்கள் விகித கணக்கெடுப்பு நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை விட ஆசிரியர்கள் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, "சர்பிளஸ்' ஆசிரியர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, மாணவர்கள் ஆசிரியர்கள் விகிதாசாரம் அடிப்படையில், ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய (பணி நிரவல்) பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டார். இதன்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் இதற்கான பணிநிரவல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ""ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும் என ரூ. பல லட்சம் கொடுத்து, பணியில் சேர்ந்தோம். "சர்பிளஸ்' என்ற பெயரில், இடமாற்றம் செய்தால் குடும்ப சூழ்நிலை பாதிக்கும்,'' என்றனர்.

பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் முருகன் கூறியதாவது: கல்வியாண்டின் இடைப்பட்ட காலத்தில் பணிநிரவல் நடத்தினால் ஆசிரியர்களுக்கு பாதிப்பு. பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். தற்காலிகமாக இம்முடிவை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்கள் எதிர்ப்பையும் மீறி பணிநிரவல் நடத்தப்பட்டால், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாளை கணக்கிட்டு, ஜூனியர் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும், என்றார்.

ஒப்புதலில் சிக்கல்:




ஒரு உதவி பெறும் பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு ஆசிரியர் மாற்றப்படும்போது, சம்பந்தப்பட்ட பள்ளி சார்பில், "அந்த ஆசிரியரை ஏற்றுக்கொள்கிறோம் என்ற ஒப்புதல்' அளிக்க வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பல பள்ளிகள், இதற்கான ஒப்புதலை அளிக்க முன்வரவில்லை. தற்போது இருக்கும் ஆசிரியர்கள் எண்ணிக்கையே போதும் என்ற நிலையை எடுக்க உள்ளதாம். இதனால், பணிநிரவல் செய்வதில் சிக்கல் ஏற்படலாம், என கல்வித்துறையினர் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment