தொடக்கக் கல்வியில், பணி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கும்,முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்' என,கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், தொடக்கக் கல்வித்துறையில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, 2004-05ம் ஆண்டு முடிய, இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், ஐந்தாம் வகுப்பு வரை, இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது எனவும், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளுக்கு, அந்தந்த, பாட பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது எனவும்,அரசு முடிவெடுத்தது.
அதன்படி, தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் நடுநிலைப்பள்ளிகளில், 2005ல் இருந்து, 26,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு உயர்நிலைப்பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு, மாநில முன்னுரிமை அடிப்படையில், 50 சதவீதம், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.மேலும், பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், மாவட்டக்கல்வி அலுவலர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. பள்ளிக்கல்வித்துறையின் கீழ், தொடக்கக்கல்வித்துறை செயல்பட்டாலும், அதை, தனி யூனிட்டாகவே கருதி, தனி நிர்வாகம் நடந்து வருகிறது. இதனால், தொடக்கக்கல்வித்துறையில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு என்பது கானல் நீராக உள்ளது.முதுகலை ஆசிரியர் நியமனத்தில், தங்களுக்கும், பதவி உயர்வு வாய்ப்பு வழங்க வேண்டும் என, தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
ஒரே சமயத்தில், டி.ஆர்.பி., தேர்வெழுதி பணிநியமனம் பெற்ற நிலையில், உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். சில ஆண்டுகளில், அவர்கள், தலைமை ஆசிரியர்களாகவும், மாவட்டக்கல்வி அலுவலராகவும் மாற வாய்ப்பு உள்ளது.
ஆனால், தொடக்கக்கல்வித்துறையில் பணியில் சேர்ந்த, பட்டதாரி ஆசிரியர்கள், கடைசி வரை, பட்டதாரி ஆசிரியர்களாவே இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.இதை மாற்றி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment