"எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்" என, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் தற்போது எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுவோருக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நான்கு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 500 வீதம் உதவி தொகை வழங்கப்படும்.
இதற்கு தேர்வு எழுத ஏழாம் வகுப்பில் ஆதிதிராவிட வகுப்பினர் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற வகுப்பினர் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வு, பிப்., 22ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு தலா ரூ. 50 உடன் விண்ணப்பிக்க வரும் 28ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வு குறித்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு "இ-மெயில்" மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்பள்ளிகளில் மாணவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தொகையுடன் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு பட்டியல் அனுப்பப்பட்டு விட்டது.
ஆனால், அன்னூர் ஒன்றியத்திலுள்ள நடுநிலைப்பள்ளிகளுக்கு இதுவரை உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் அல்லது மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்திலிருந்து தகவல் வரவில்லை. நேற்று முதல் அரை ஆண்டு தேர்வு முடிந்து விடுமுறை துவங்கியது.
இந்நிலையில் "எந்த தகவலும் வராததால் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க முடியாமல், நடுநிலைப் பள்ளியில் உள்ள எட்டாம் வகுப்பு மாணவர்கள் இத்தேர்வு எழுத முடியாமல், உதவி தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என, பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment