Monday, 2 December 2013

இப்படியும் சில இளைஞர்கள்...

ஜூனியர் அச்சீவர் .. இது ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் பெயர்.. (Website: http://www.jaindia.org/)

இவர்கள் செய்து வரும் அற்புதமான காரியம் - ஒவ்வொரு  வார இறுதியிலும் அரசு பள்ளி மாணவர்களுடன் ஒரு நாள் முழுவதும்  செலவிட்டு - பல்வேறு வித படிப்புகள் குறித்த விழிப்புணர்வை வர வைப்பது ...

கடந்த 4 ஆண்டுகளாக எங்கள் வீட்டருகே உள்ள புழுதிவாக்கம் தந்தை பெரியார் அரசு மேல்நிலை பள்ளியில் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதில் எனக்கு பெரும் மன நிறைவு கிடைக்கிறது. 

ஒரு காலத்தில் என்னை போன்ற நடுத்தர மக்களும் படித்தது இத்தகைய பள்ளிகளில் தான் ! இன்றோ - இந்த பள்ளியில் படிப்போர் அநேகமாய் -  கூலி வேலை அல்லது வீட்டில் வேலை செய்வோரின் குழந்தைகளே. அவர்களுக்கு இவ்வளவு படிப்புகள் இருக்கிறது என்பதே தெரியாது ! ஒரு தோழன்/ தோழி போல  ஏழெட்டு மணி நேரம் அவர்களுடன் செலவழித்து - அவர்களுக்கு எந்த  துறையில் அதிக ஆர்வம் இருக்கிறது என்பதையும் கண்டறிந்து - அது சார்ந்த படிப்புகளை அறிமுகம் செய்வார்கள் இந்த நிறுவனத்தினர்.

ஜூனியர் அச்சீவர் என்பது ஒரு மிக பெரும் அமைப்பு . அதனுடன் காக்னிசன்ட் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணைந்து இந்த நற்செயல்களை செய்கின்றன.


தொடர்ந்து நான்காவது ஆண்டாக நாளை  சனிக்கிழமை காக்னிசன்ட் நிறுவனத்தை சேர்ந்த 14 வாலண்டியர்கள் தந்தை பெரியார் அரசு மேல்நிலை பள்ளியில் - 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளிடம் - படிப்புகள், வேலை வாய்ப்பு பற்றி  - உரையாட உள்ளனர். மட்டுமல்ல - தங்களது தொலை பேசி மற்றும் மெயில் முகவரி தந்து - அவர்களுக்கு படிப்பு மற்றும் வேலை வாய்ப்பில் எந்த குழப்பம் இருப்பினும் தொடர்பு கொள்ளுமாறு கூறுவர் இவர்கள் !

செய்தி ஊடகம் என்றாலே - நெகடிவ் செயல்களை அதிகம் பேசும் - இருப்பினும் சத்தமின்றி இப்படி நடக்கும் நற்செயல்களையும் பாராட்டுவோம். பிறருடன் பகிர்ந்து கொள்வோம்.

நான் செய்வது என் வீட்டுருகே உள்ள ஒரே ஒரு பள்ளிக்கு மட்டுமே. ஆனால் 22 வயது முதல் 25 வயது வரை உள்ள ஏராள இளைஞர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் இப்படி எதோ ஒரு பள்ளியில் தங்கள் வார இறுதியை செலவிடுகிறார்கள். இவர்களால் சமூகத்தில் ஒரு சிறு மாறுதலை உண்மையில் விளைவிக்க முடிகிறது... பாசிடிவ் ஆன மாறுதல் !

இதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். 

தந்தை பெரியார் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகிகள் - மிகுந்த முயற்சி எடுத்து - சென்னையை சேர்ந்த ஹிந்துஸ்தான் இஞ்சினியரிங் கல்லூரியில்   4 இலவச சீட்டுகள் (கல்லூரி பீஸ் முதல் பஸ் சார்ஜ் வரை அனைத்தும் இலவசம்!) பெற்றுள்ளனர். ஆனால் இந்த 4 இலவச சீட்டுகளில் சேரக்கூட மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியது இல்லை. யாரேனும் ஒரே ஒருவர் - ஓரிரு வருடத்துக்கு ஒரு முறை தான் அந்த சலுகையை பயன்படுத்தி சேருவர். 

ஆனால் கடந்த 2 வருடங்களாக நிலைமை மாறி விட்டது. இப்போது ஒவ்வொரு வருடமும் 4 மாணவர் அல்லது மாணவி அந்த இலவச சீட்டை பயன்படுத்தி சேர்கிறார். 

இப்போது எங்கள் முன் இருப்பது வேறு விதமான சாலஞ்ச். அப்படி சேரும் மாணவர்கள் பலர் ஆங்கில மீடியமில் இஞ்சினியரிங் படிக்க திணறுகிறார்கள். படிப்பை நிறுத்தி விடலாமா என்றும் பலர் புலம்புகிறார்கள். 

இது போன்ற பிரச்சனை வராமல் தடுக்க 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலம் (Spoken  & Written English ) பள்ளிக்கு வெளியிலிருந்து ஒரு நண்பர் வந்து இலவசமாய் பாடம் சொல்லி தர ஏற்பாடு செய்துள்ளோம். ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர் - தினம் காலை ஒரு மணி நேரம் மற்றும் சனிக்க்ழமைகளில் முழு நாளும் இவர்களுக்கு  ஆங்கிலம் சொல்லி  தருகிறார்.ஓரிரு வருடத்தில் இப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்திலும் நல்ல பேசும் மற்றும் எழுதும் திறன் பெறுவார்கள் என நம்புகிறோம் !

இந்த விஷயம் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் என்ன செய்யலாம் ?

1. ஜூனியர் அச்சீவர்-ல் ஒரு வாலண்டியராக உங்களை இணைத்து கொள்ளலாம். அவர்கள் தரும் சிறு ட்ரைனிங்கிற்கு பிறகு - அனைத்து சனிக்கிழமைகளில் இல்லையென்றாலும் வருடத்தில் சில சனிக்கிழமையாவது இத்தகைய பள்ளி மாணவ மாணவிகளிடம் உங்கள் கருத்தை/அனுபவத்தை பகிரலாம்.



2. உங்கள் வீட்டருகே உள்ள பள்ளி அல்லது நீங்கள் படித்த பள்ளியில் இந்த நிகழ்வை நடத்த   வேண்டுமெனில் - குறிப்பிட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது குறிப்பிட்ட பொறுப்பு ஆசிரியர்  தொலை பேசி  எண் தந்தால் - அப்பள்ளி மாணவர்களுக்கும்  இத்தகைய  ஒரு நாள் பயிற்சி கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் !

சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தின் எந்த மூலை, முடுக்கில் இருக்கும் பள்ளிக்கும் வந்த இந்நிகழ்வை நடத்த முடியும். பள்ளியிலிருந்து ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை. அவர்கள் தர வேண்டியது அனுமதி மட்டுமே !

3. மடிப்பாக்கம் அல்லது புழுதிவாக்கம் அருகில் நீங்கள் இருந்தால் - நாளை காலை 9.30 முதல் மதியம் 3.30 வரை நடக்கும் இந்த நிகழ்வை நீங்கள் நேரில் வந்து பார்வையிடலாம் ! நேரில் வந்து பார்த்தால் நீங்கள் நெகிழ்ந்து போவீர்கள் என்பது மட்டும் உறுதி !

4. இந்த தகவலை உங்கள் நண்பர்களிடம் ஷேர் செய்தால்- அவர்களில் ஆர்வம் இருப்போர் வாலண்டியர் ஆகலாம். அல்லது குறைந்த பட்சம் தங்களுக்கு தெரிந்த அல்லது தாங்கள் படித்த பள்ளியில் இந்த பயனுள்ள நிகழ்வு நடக்க ஏற்பாடு செய்யலாம்

********************
சென்ற ஆண்டுகளில் நடத்திய இதே நிகழ்வு குறித்த படங்கள் மற்றும் வீடியோக்கள் இங்கு காணலாம் :

http://veeduthirumbal.blogspot.com/2011/08/blog-post.html

No comments:

Post a Comment