: "குழந்தை திருமணத்தை தடுக்க, பத்திரிகை அச்சடிக்கும் பிரஸ்களில், வயது சான்று அல்லது வி.ஏ.ஓ., சான்று காண்பித்தால் மட்டுமே அச்சடித்து தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.' என மாவட்ட பாலகிருஷ்ணன் எஸ்.பி., தெரிவித்தார்.மதுரையில், அவ்வப்போது குழந்தை திருமணம் நடக்க இருப்பதும், அதை போலீசார் தடுப்பதுமாக உள்ளனர். மணமகன் மற்றும் சிறுமியின் பெற்றோர் கைது செய்யப்படுகின்றனர். இருப்பினும், குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், தொடர்ந்து அவ்வகை திருமணங்கள் நடக்கிறது. இதை தடுத்து, அடுத்தாண்டு குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக மதுரையை மாற்றி காட்டும் முயற்சியில் பாலகிருஷ்ணன் எஸ்.பி., ஈடுபட்டுள்ளார். இதற்கு உதவ, "என்டகான்' என்ற சமூக அமைப்பு முன்வந்துள்ளது. இதன் நிர்வாகிகள் அமர்நாத், சபா கூறுகையில், ""குழந்தை திருமணம் தடுப்பதன் அவசியம் குறித்து, 40 கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள், ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், கிராம பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவர்,'' என்றனர்.எஸ்.பி., கூறியதாவது: திருமணம் நடக்கும் கோயில்கள், மண்டபங்களை கணக்கெடுத்து, முகூர்த்த நாட்களில் கண்காணித்து வருகிறோம். திருமண வயது சான்று அல்லது வி.ஏ.ஓ., சான்று காண்பித்தால் மட்டுமே திருமண பத்திரிகை அச்சடித்து தரவேண்டும் என பிரின்டிங் பிரஸ் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதத்திற்குள் ஊராட்சி தலைவர், கவுன்சிலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வறுமை காரணமாக குழந்தை திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதை தடுக்க, பெற்றோருக்கு வேலை வாய்ப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படும். குழந்தை திருமணம் குறித்த தகவல்களை, 1098 என்ற இலவச எண்ணில் தெரிவிக்கலாம், என்றார்.
No comments:
Post a Comment