Friday, 27 December 2013

ஆசிரியர்களுக்கான ஊதிய விகித அளவை மாற்றக் கோரி வழக்கு: தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.கிப்ஸன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்

கேந்த்ரிய வித்யாலயா பள்ளி இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்கு இணையாக மற்ற பள்ளி ஆசிரியர்களுக்கும் ஊதிய விகித அளவை மாற்றக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.கிப்ஸன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: மத்திய அரசின் ஆறாவது ஊதியக் குழுவின்படி இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்கு ரூ. 5,200 முதல் 20 ஆயிரம் வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. இதே சம்பளம், அமைச்சக ஊழியர்களுக்கும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், கேந்த்ரிய வித்யாலயா பள்ளியில் பணிபுரியும் இரண்டாம் நிலை ஆசிரியர்கள் ரூ. 9,300 முதல் 34 ஆயிரம் வரை சம்பளம் பெறுகிறார்கள். இது தொடர்பாக அரசுக்கு மனு அளித்தோம். இதன்படி, ஊதிய முரண்பாடு தொடர்பாக விசாரணை செய்ய ஒரு நபர் குழுவை அசு நியமித்தது.
கடந்த 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், "தமிழகத்தில் கேந்த்ரிய வித்யாலயா பள்ளியின் எண்ணிக்கை மிகவும் குறைவாக (1017) உள்ளது. அதே சமயம், மற்ற பள்ளிகளில் பணிபுரியும் இரண்டாம் நிலை ஆசிரியரிகளின் எண்ணிக்கை 1.16 லட்சமாக உள்ளது. ஊதிய விகிதத்தை மாற்றி அமைத்தால் ஆண்டுக்கு ரூ.668 கோடி சுமை ஏற்படும்' என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சக ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.9,300 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்கு அந்த ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே, இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித அளவை மாற்றி அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment