Wednesday, 1 January 2014

சளி, காய்ச்சலா? டயல் செய்யுங்க '104'

 பொதுமக்கள் தாங்கள் இருப்பிடத்தில் இருந்தே, மருத்துவ ஆலோசனை பெறும் வகையில், புதிய மருத்துவ சேவை திட்டம், '104' என்ற போன் இணைப்பு எண்ணில், துவக்கப்பட்டுள்ளது. இதில், 104 என்ற இந்த போன் எண்ணில் தொடர்பு கொண்டால், டாக்டர்கள் குழு, தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கும். தமிழகத்தில், அவசர கால, ஆம்புலன்ஸ் வசதிக்கு, '108' என்ற போன் எண்ணில் தகவல் தெரிவித்தால், உடனடியாக, ஆம்புலன்ஸ் வாகனம் வீடு வந்து சேரும். இந்தச் சேவைக்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, '104' என்ற போன் எண்ணில் தொடர்பு கொண்டால், முதலுதவி சிகிச்சை, மருத்துவ ஆலோசனைகள் தரும் புதிய சேவைத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, புத்தாண்டு பரிசாக, இச்சேவையை துவக்கியுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு, 1.2 கோடி ரூபாய் அரசு நிதி அளிக்கிறது. இத்திட்டமும், அவசர கால, '108' ஆம்புலன்ஸ் திட்டத்தை, செயல்படுத்தும், 'ஜிவிகே' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள், '104' என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, உடல்நல பாதிப்பு குறித்து தெரிவித்தால், நோயின் தன்மைக்கேற்ப, டாக்டர்கள் மருத்துவ ஆலோசனை தருவர். முதலுதவி ஆலோசனை மட்டுமின்றி, எந்த மாதிரியான மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், தெரிவிப்பர். கர்ப்ப கால பிரச்னைகள், மாதவிடாய், மார்பக புற்றுநோய் குறி?த்து பெண்கள் பேசினால், விளக்கம் அளிக்க, பெண் டாக்டர்களும் உள்ளனர். மன அழுத்தம், மன சிதைவால் தற்கொலை முயற்சிக்கு செல்வோர், '104' போன் எண்ணை டயல் செய்தால், 'கவுன்சிலிங்' தரப்படும்.

No comments:

Post a Comment