Wednesday, 22 January 2014

10ம் வகுப்பு மாணவியுடன் ஆசிரியர் ஓட்டம்; ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியல்

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ளது மூலப்புதூர் கிராமம். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் இரமேஷ் (வயது-36). இவரது மனைவி பெயர் விஜி (வயது-32). கனவன் மனைவி இருவரும் ஒரே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்கள்.
ஆசிரியர் இரமேஷ் அருகிலுள்ள கொண்டையம்பள்ளி என்ற ஊரில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு தனி வகுப்பு (டியூசன்) நடத்தி வந்துள்ளார்.
அங்கு தனிவகுப்புக்கு வந்த ஆணையம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருடன் ஆசிரியர் இரமேஷ் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில், 20-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி இரவு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. மகளை காணவில்லையென பெற்றோர்கள் தேடிவந்த போது, உங்கள் மகளை நான்தான் கூட்டிக்கொண்டு வந்துவிட்டேன் என்று ஆசிரியர் மாணவியின் பெற்றோருக்கு போன் மூலமாக ஆசிரியர் இரமேஷ் தகவல் சொல்லியுள்ளார்.
21-ம் தேதி காலை ஆசிரியர் இரமேஷால் கடத்தப்பட்ட மாணவியை உடனடியாக கண்டுபிடித்து மீட்டுத்தரவேண்டும் என்று மாணவியின் பெற்றோர்கள் சார்பாக தம்மம்பட்டி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து, போலீசார் விசாராணை நடத்திவந்தனர்.
ஏற்கனவே, இதே பள்ளியில் வேலை பார்த்து வந்த இரமேஷ்குமார் என்ற ஆசிரியர் தனது பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியை கூட்டிகொண்டு ஓடிப்போய்விட்டார். அவர் மீதும், இப்போது மாணவியை கூட்டிக்கொண்டு போய்விட்ட ஆசிரியர் இரமேஷ் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் உதவி கல்வி அலுவலர் வாசுகி என்பவரிடம் தொலைபேசி மூலமாக புகார் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை காலை பள்ளிக்கு வந்து விசாரணை நடத்துவதாக பொதுமக்களிடம் உதவிகல்வி அலுவலர் வாசுகி தெரிவித்துள்ளார். ஆனால், புதன்கிழமை காலை அவர் கூறியபடி பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தவில்லை. இதை கண்டித்தும், ஒழுங்கீனம் இல்லாத பள்ளி ஆசிரியர்களான இரமேஷ்குமார் மற்றும் இரமேஷ் ஆகியோர் மீது கைது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், பள்ளி ஆசிரியர்களை சரிவர கவனிக்காத தலைமை ஆசிரியர் லூர்துசாமி என்பவரையும், ஓடிப்போன ஆசிரியர் இரமேஷின் மனைவி ஆசிரியர் விஜியையும் உடனடியாக இந்தபள்ளியில் இருந்து இடமாற்றம் செய்யவேண்டும் என்றும் கோரி கொண்டையம்பள்ளி கிராமம் மற்றும் மூலப்புதூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் தம்மம்பட்டி கெங்கவல்லி சாலையில் கூடி சாலை மரியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த தம்மம்பட்டி போலிஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார், உடனடியாக உதவி கல்வி அலுவலருக்கு தகவல் கொடுத்து நிகழ்விடத்துக்கு அவரை வர ஏற்பாடு செய்து தலைமை ஆசிரியர் மூலம் புகார் கொடுத்து, ஆசிரியர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் நடத்திய சாலை மறியல் கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment