Friday, 24 January 2014

+2வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி, அக்காள் மாமியாரை வெட்டிக் கொன்ற பரிதாபம்

மாநில அளவில் தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெற்று +2வில் சாதித்த மாணவி ஒருவர், தனது அக்காள் வாழ்க்கையில் விளையாடிய அவரது மாமியாரை வெட்டிக் கொன்று தனது வாழ்க்கையைத் தொலைத்து நின்ற பரிதாபம் மதுரை அருகே நிகழ்ந்துள்ளது.
மதுரை அவனியாபுரம், மூணுமாடி காலனியைச் சேந்தவர் தங்கவேலு என்ற பெண்மணி. இவரது மகன் செல்வக்குமார். இவருக்கு கலையரசி என்பவருடன் சென்ற வருடம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குள் வரதட்சிணை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மணமான ஒரே வாரத்தில், கலையரசி தனது பெற்றோர் வீட்டுக்குத் திரும்பிவிட்டார். இந்நிலையில், ஒரு வருடம் ஒடிவிட்டதால், செல்வக்குமாருக்கு இரண்டாவது திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார் தங்கவேலு.
தனது அக்காள் கலையரசி தனது வீட்டோடு இருப்பதற்குக் காரணம் அவரின் மாமியார் தங்கவேலுதான் என்பதால் அவர் மீது கோபத்தில் இருந்தார் தங்கரத்தினம் (18). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்து வருகிறார். மதுரை காமராஜபுரத்தில் வசித்து வரும் இவர், +2 தேர்வில் தமிழ்ப் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்காளின் வாழ்க்கை பறிபோன வருத்தத்தில் இருந்த இவர் இன்று தனது அக்காளின் மாமியார் வீட்டுக்குச் சென்றார். அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அரிவாளால் அவரை கழுத்து, கால், கையில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த தங்கவேலு மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் இன்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதை அடுத்து, தங்கரத்தினம், காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

No comments:

Post a Comment