Thursday, 9 January 2014

ஆசிரியருக்கு செருப்படி: தலைமை ஆசிரியை மீது புகார்

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், தன்னை செருப்பால் அடித்ததாக, ஆசிரியர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எ.பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் கலையரசன், 52. இவர், எஸ்.பட்டியில் உள்ள, அரசு நடுநிலைப் பள்ளியில், ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதே பள்ளியில், எஸ்.பட்டியைச் சேர்ந்த செல்வராணி, 50, தலைமை ஆசிரியையாக பணிபுரிகிறார். கடந்த 6ம் தேதி, அரூர் போலீசாரிடம், ஆசிரியர் கலையரசன், தலைமை ஆசிரியை செல்வராணி மீது புகார் செய்தார். புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளிக்கூடத்தில், தலைமையாசிரியை செல்வராணி, "வருகை பதிவேடு ஏன் குறிக்கவில்லை?' என கேட்டு, தகாத வார்த்தையால் திட்டி, என்னை செருப்பால் அடித்தார். இதனால், காயமடைந்த நான், அரூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றேன். இதுகுறித்து, மாவட்ட தொடக்க அலுவலரிடம் புகார் செய்துள்ளேன். தலைமை ஆசிரியை மீது, நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது. இதே போல், தலைமையாசிரியர் செல்வராணி, அரூர் போலீசாரிடம் கொடுத்த புகாரில், "ஆசிரியர் கலையரசன், மாணவர்களின் விடைத்தாள்களை சரியாக திருத்தவில்லை. இதுபற்றி கேட்ட போது, தலைமையாசிரியர் என்றும் பாராமல், என்னை தரக்குறைவாக பேசினார்' என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சாமிநாதனிடம் கேட்டபோது, ""இருவரின் புகார்களையும், போலீசார் பதிவு செய்யவில்லை. விசாரணை செய்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, அரூர், உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment