Saturday, 25 January 2014

தமிழ் படித்தவர்களுக்கு மரியாதை இல்லை: இயக்குநர் தங்கர்பச்சான்

தமிழ் படித்தவர்களுக்கு இங்கு மரியாதை இல்லை என திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் பேசினார்.
தென்மண்டல அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான கலை நிகழ்ச்சி கோவை என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 55 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் பேசியது:
இந்தியாவில் மொழியை பெயராக வைத்து அழைக்கப்படும் மாநிலம் தமிழகம். ஆனால், இங்கு தமிழர்கள்தான் இல்லை. தமிழர்கள் என்ற பெயரில் ஒரு நிமிடம் கூட  தமிழ் பேச தெரியாதவர்கள்தான் உள்ளனர். அதோடு நமது பண்பாடு, கலாசாரம், பெருமைகள், சிந்தனை உள்ளிட்ட அனைத்தையும் இப்போது இழந்து நிற்கிறோம். நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற பிறமொழியினர் தம்மை காத்துக் கொண்டார்கள். நாம்தான் தொலைந்துப் போனோம். ஆங்கிலம், சமஸ்கிருதம் இல்லாமல் ஒரு நிமிடம் கூட நம்மில் பலருக்கு பேச முடிவதில்லை. அதற்கு நமது கல்வியில் தமிழ் இல்லாமல் போனதே முக்கியக் காரணம்.
குறிப்பாக தமிழ் படித்தவர்களுக்கு இங்கு மரியாதை இல்லை. தமிழ் வழிக் கல்வி கற்றவர்களுக்கு எவ்வித அதிகாரமும் வழங்கப்படுவதில்லை. இந்தக் கொடுமை தமிழகத்தை தவிர வேறு எங்கும் இல்லை. தமிழ் எந்த துணையும் இல்லாமல் இயங்கும் வல்லமை உடையது. அப்படிப்பட்ட மொழி இன்று சீர்குலைந்து கிடக்கிறது.
தமிழ் பேச தெரியாதவர்களை எவ்வாறு தமிழர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியும். இலங்கை தமிழர்கள் தமிழில்தான் பேசுகிறார்கள். உலகில் எந்த நாடுகளுக்கு சென்றாலும் தமிழ் பேசி தமிழர்களாகவே அவர்கள் வாழ்கிறார்கள். ஆனால், ஒரு நிமிடம் கூட தமிழில் பேச முடியாமல் இங்கு அவர்களுக்காக போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இன்று மக்களை நல்வழிப்படுத்த நல்ல தலைவர்கள் இல்லை. நல்ல திரைப்பட நடிகர்கள் இல்லை. மக்களின் பணத்தை மட்டுமே குறியாக வைத்து திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. கல்வி மூலமாக தமிழ் மண்ணுக்கு, தமிழ் மொழிக்கு, தமிழ் இனத்துக்கு மாணவர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment