Thursday, 9 January 2014

கல்வி கட்டணம் வசூல்: தடுத்து நிறுத்த கோரிக்கை

அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசு விதிமுறைக்கு மாறாக, கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதை தடுத்து நிறுத்த, கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உட்பட, பலரும் எதிர்பார்க்கின்றனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு, இலவச கல்வி அளிக்கப்படுகிறது; ஆசிரியர்களுக்கு, அரசு சம்பளம் வழங்குகிறது. இந்த நடைமுறை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும். ஆனால், மொத்தம் உள்ள, 8,365 அரசு உதவி பெறும் பள்ளிகளில், பெரும்பாலானவற்றில், எவ்வித ரசீதும் இன்றி, கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வகுப்பிற்கு தகுந்தாற்போல், 1,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை, பல வகைகளில், கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனாலும், ஆண்டாண்டு காலமாக, இந்த விதிமீறல் நடந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து, அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலர், அண்ணாமலை கூறுகையில், ''அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது உண்மை தான். தடுக்க வேண்டிய கல்வித் துறை, அமைதியாக இருக்கிறது,'' என்றார். அரசு பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'கல்வித் துறை சார்பில், ஏதாவது விழா என்றால், அதற்கான செலவில் பெரும் பகுதி, சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலையில் விழுகிறது. இதுபோன்ற காரணங்களால், தனியார் மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் நடக்கும் விதிமீறலை, துறை கண்டு கொள்வது இல்லை' என்றார். நகரங்களில் உள்ள பள்ளிகளில், இக்கட்டண வசூல் அதிகம் என்று கூறப்படுகிறது. அதேசமயம், பல்வேறு செலவினங்களைத் தாண்டி, வரவு பார்க்க விரும்பும் நிர்வாகம், இந்த வசூலை, 'கமுக்கமாக' செய்கிறது. தங்கள் குழந்தைகளை, நினைத்த நேரத்தில், வேறு பள்ளிக்கு மாற்ற முடியாத நிலையில், பெற்றோர், தங்கள் எதிர்ப்பை காட்ட முடியாமல், கேட்ட தொகையை கட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

No comments:

Post a Comment