தாம்பரம் தாலுகா சார்பில் மக்களை தேடி வருவாய் திட்ட முகாம் தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. தாம்பரம் தாலுகாவில் உள்ள கடப்பேரி கிராமத்திற்காக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தாம்பரம் கோட்டாட்சியர் இந்திரஜித், தாம்பரம் நகராட்சி தலைவர் கரிகாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுமக்களிடமிருந்து 78 மனுக்கள் பெறப்பட்டன. போதிய அறிவிப்பு செய்யாததால் மக்கள் குறைவாகவே வந்திருந்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது ஒரு மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இல்லையெனில் மனுதாரருக்கு காரணம் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டது.
முகாம் நடைபெற்ற தாம்பரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 250 மாணவர்கள் படிக்கின்றனர். ஒருபுறம் மக்களை தேடி வருவாய் திட்ட முகாமும், மற்றொரு பக்கம் பள்ளியும் நடந்தது. இது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.பள்ளி நேரத்தில் ஒலி பெருக்கி பயன்படுத்தியதால், மாணவர்களுக்கு படம் நடத்தும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளியில் நேற்று மதியம் வரை பாடங்கள் நடைபெறவில்லை.இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, இது நகராட்சி பள்ளி. எங்கள் எதிர்ப்பை மீறி அனுமதி கொடுத்துள்ளனர். கடப்பேரி கிராம மக்களின் தேவைக்கு மக்களை தேடி வருவாய் திட்ட முகாம் நடத்துவதற்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டதாக தாலுகா அலுவலகம் சார்பில் தெரிவித்தனர் என்றனர்.
கடப்பேரி கிராமத்தில் ஏராளமான திருமண மண்டபங்கள் உள்ளன. மேலும் தாம்பரம் தாலுகா அலுவலகம் கடப்பேரி கிராமத்திலேயே இயங்கி வருகிறது. அலுவலகத்தின் வெளியே பந்தல் அமைத்து மக்களை தேடி வருவாய் திட்ட முகாமினை நடத்தலாம். ஆனால், இந்த முகாமினை பேச்சுக்காக நடத்துவது போல வருவாய்த்துறையினர் நடத்துகின்றனர். பொதுமக்கள் பயன் அடைய வேண்டும் என்று அவர்கள் நினைக்க வில்லை. மக்களை தேடி வருவாய் திட்ட முகாமில் திட்டமே இல்லை என பொதுநல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இனிவரும் காலங்களில் உண்மையான முகாம்களை நடத்த வருவாய்த்துறை முயற்சி மேற்கொள்ளவேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் முறையாக கண்காணிப்பு செய்ய வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment