"உலகில், 7வது இடத்திலிருந்த மன அழுத்த நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது,' என, மதுரையில் நடந்த விழாவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சிகளில் முதன்முறையாக, 2012 டிசம்பரில் மதுரை கொடிக்குளத்தில், மனநல மருந்தகம் மற்றும் மதுபோதை மாற்று சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. அதில் குணமடைந்தவர்களை வாழ்த்தும் விழா நேற்று நடந்தது. கமிஷனர் கிரண் குராலா, மேயர் ராஜன் செல்லப்பா பங்கேற்றனர்.
விழாவில், டாக்டர்கள் தொகுத்த குறிப்பு ஒன்றில், அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில் கூறியதாவது: உலகில், பெருகி வரும் மக்கள் தொகையும், மாறி வரும் வாழ்க்கை சூழலும், மன அழுத்தத்தின் தாக்கத்தை அதிகப்படுத்துகிறது. உலக சுகாதார நிறுவன (டபிள்யூ.எச்.ஓ) ஆய்வின் படி, 10 ஆண்டுகளுக்கு முன், மன அழுத்த நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7வது இடத்தில் இருந்தது. தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதே நிலை நீடித்தால், 2020ல், "மனிதனை கொல்லும் முதல் 10 நோய்களில், "மன அழுத்த நோய்' முதலிடத்தில் இருக்கும். உலகில் நடக்கும் தற்கொலைக்கான காரணங்களில், முதல் இடத்தில் இருப்பதும், மன அழுத்தமே. கணிசமான நபர்கள், போதைத் தேடி அடிமையாவதும், மன அழுத்தம் காரணமாகத் தான். எனவே, மனநோயை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிடவேண்டும், என,அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பங்கேற்ற மாநகராட்சி டாக்டர் ஒருவரிடம் கேட்ட போது, "கடந்த ஆண்டில், 381 பேர் இங்கு சிகிச்சை பெற்றனர். அவர்களில் 90 சதவீதம் பேர், போதைக்கு அடிமையானவர்கள். மீண்டு, தற்போது சகஜநிலைக்கு திரும்பியுள்ளனர். விரும்புவோர், இங்கு வந்து சிகிச்சை பெறலாம்,' என்றார்.
No comments:
Post a Comment