Tuesday, 25 February 2014

ஒரே பள்ளியில் 28 ஆண்டு பணி: ஆசிரியருக்கு தங்க பேனா, தங்க செயின், பைக், வழங்கி பாராட்டு விழா

ஒரே பள்ளியில், 28 ஆண்டு பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு, முன்னாள் மாணவர்கள், பைக், தங்க பேனா, தங்க செயின் வழங்கி கவுரவித்தனர்.
அரியலூர் மாவட்டம், குமிலியம் பகுதியைச் சேர்ந்தவர், உடற்கல்வி ஆசிரியர், திருஞானசம்பந்தம். இவர், 30வது வயதில், சேலம் மாவட்டம், மேட்டூர், மேல்நிலை பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து, 28 ஆண்டு, ஒரே பள்ளியில் பணி புரிந்த, ஆசிரியர் திருஞானசம்பந்தம், ஏராளமான மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து, மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்துள்ளார்; ஏழை மாணவர்களுக்கு, சொந்த செலவில் பயிற்சி அளித்துள்ளார். கபடியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சொந்த செலவில் சைக்கிள் வாங்கி கொடுத்தும் பாராட்டியுள்ளார். இந்நிலையில், ஆசிரியர் சம்பந்தம், கடந்த, 22ம் தேதி, பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெறும் ஆசிரியருக்கு, பிரமாண்ட பாராட்டு விழா நடத்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் கிராம மக்கள், பள்ளி வளாகத்தில் கூடினர். முன்னாள் மாணவர்கள் சார்பில், விழாவுக்கு வந்த அனைவருக்கும், மதிய உணவு வழங்கப்பட்டது. மாலையில் நடந்த பாராட்டு விழாவில், ஆசிரியர் திருஞானசம்பந்தத்துக்கு, மாணவர்கள், புதிய, 'பேஷன் புரோ' பைக், ஒரு தங்க பேனா, 1 லட்சம் மதிப்புள்ள தங்க செயின் மற்றும் ஏராளமான பரிசு பொருட்களை வழங்கினர். நேற்று முன்தினம் இரவு, மாணவர்கள், மூன்று பஸ்களில், அரியலூர் மாவட்டம், குமிலியத்தில் உள்ள வீட்டில், ஆசிரியரை கொண்டு விட்டு, பிரியா விடை பெற்றனர்.

No comments:

Post a Comment