Thursday, 20 February 2014

300-வது ஆண்டை நெருங்கும் கடலூர் தூய தாவீது பள்ளி- 1717-ல் தொடங்கி மலைக்க வைக்கும் மகத்தான கல்விச் சேவை

கடலூர் முதுநகரில் 1717-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் தூய தாவீது (St.David) மேனிலைப்பள்ளி தனது 300-வது ஆண்டு கொண்டாட்டத்துக்கு இப்போதே திட்டமிடத் தொடங்கியுள்ளது.
இந்தியாவுக்கு மிஷினரியாக வந்த பர்தோலொமேயுசீகன் பால் என்பவர் கடலூர் முதுநகரில் கடற்கரையை ஒட்டி எஸ்பிஜி (Society for the Propagation of Gospel) எனும் தமிழ் வழி ஆரம்பப் பள்ளியை 1717-ல் நிறுவினார். கடலூரில் துவக்கப்பட்ட முதல் தமிழ்வழி ஆரம்பப் பள்ளியும் இதுதான். டென்மார்க்கிலிருந்து கிடைத்த நிதியுதவியைக் கொண்டு பள்ளி தொடர்ந்து செயல் படத் தொடங்கியது.
ராபர்ட் கிளைவின் ஓய்வறை
1756 முதல் 1760-ம் ஆண்டு வரை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராபர்ட் கிளைவ் வுக்கு இப்பள்ளி வளாகத்தில் ஓய்வறை உண்டு. தற்போது அது தலைமையாசிரியர் குடியிருப்பாக உள்ளது. இதுவரை சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் மாணவ, மாணவியர் பயின்றுள்ளனர். சுமார் 6 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் பணிபுரிந்திருக்கின்றனர். தற்போதைய தலைமையாசிரியர் மனோகர் தேவபுத்ரன். 1400 மாணவர்கள், 50 ஆசிரியர்கள் உள்ளனர்.
இப்பள்ளியின் தாளாளர் சாலமன் சவுந்திரதாஸ் கூறுகை யில், “இப்பள்ளி பல அரசியல் தலைவர்கள், சிறந்த நிர்வாகத்திறன் கொண்ட மேலாளர்களையும், ஐஐடி பேராசிரியர்களையும் உருவாக்கியுள்ளது.
18 மற்றும் 19-ம் நூற்றாண்டின் மாணவர் கள் பற்றிய தகவல்கள் தற் போதில்லை என்றாலும் பண்ருட்டி ராமச்சந்திரன், கி.வீரமணி, முன்னாள் அமைச்சர் பூவராகவன், டிஜிஎஸ் தினகரன் உள்ளிட்டோர் இப்பள்ளி மாணவர்கள்” என்றார்.
தேர்ச்சி பெறாத பண்ருட்டி ராமச்சந்திரன்
முன்னாள் மாணவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தனது பள்ளி அனுபவங்களைத் தி இந்து நிருபரிடம் பகிர்ந்து கொண்டார். “1947 முதல் 1953-ம் ஆண்டு வரை 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்றேன். பின்தங்கிய மாணவனாக இருந்ததால் 7-ம் வகுப்பை இருமுறை பயில நேர்ந்தது. பின்னர் ஆசிரியர்களின் ஊக்கத்தால் 10-ம் வகுப்புத் தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவனாக உயர்ந்தேன். தலைமையாசிரியராக இருந்த அருமைநாயகம் மறக்க முடியாத வர்” என்றார்.
திண்ணைப் பள்ளியிலிருந்து…
திக தலைவர் கி.வீரமணி கூறுகையில், “இப்பள்ளியில் 1944 முதல் 1950-ம் ஆண்டு வரை பயின்றேன். அதற்கு முன் எழுத்தாளர் ஜெயகாந்தனின் அத்தை சொர்ணாம்பாள் நடத் திய திண்ணைப் பள்ளியில் நானும் ஜெயகாந்தனும் பயின் றோம். பின்னர் எஸ்பிஜியில் என்னுடன் ஜெயகாந்தன் சிறிது நாட்கள் பயின்றார். தமிழ் புலவர்கள் பழனியாண்டி முதலியார், சம்மந்தம், அருமைநாயகம் உள்ளிட்டோர் தமிழாசிரியர் களாக இருந்ததை மறக்க இயலாது” என்றார்.
கல்விச் சேவையில் மகத்தான பங்களிப்புடன் 275 ஆண்டுகளாகத் தமிழ் வழிக்கல்விப் பள்ளியாக இருந்தது தற்போது ஆங்கில வழிக் கல்வியையும் அளிக்கிறது. தானே புயலால் பொலிவிழந்து காணப்படும் நிலையில் பள்ளியின் 300-வது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய மின்னஞ்சல்
இதற்காக முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கவும் பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. முன்னாள் மாணவர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக csistdavids1717@gmail.com என்ற மின்னஞ்சலும் உருவாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment