Friday, 14 February 2014

இந்தியாவில் ஆண்டுக்கு 44 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகிறார்கள்


இந்தியாவில் ஆண்டிற்கு 44 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாக குழந்தைகள் கல்வி அமைப்பு தெரிவித்துள்ளது.நமது நாட்டில் உள்ள அனைத்து பெரிய ரயில் நிலையங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து ரயில்வே கோட்டங்களிலும் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. ஈரோடு ரயில் நிலையத்தில் நேற்று குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில்,  ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகள் கல்வி அமைப்பின் ஆலோசகர் பாலமுருகன் பேசியதாவது: இந்தியாவில் கடந்த ஆண்டில் 44 ஆயிரம் குழந்தைகள் மாயமாகி உள்ளனர். இதில், 11 ஆயிரம் குழந்தைகளின் கதி என்ன ஆனது என்பது தெரியாமல் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாயமாகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்த சூழ்நிலையில் தான் கோர்ட் உத்தரவு படி ஒவ்வொரு முக்கிய ரயில் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப் பட்டு வருகின்றது. 
ரயில் நிலையத்தில் மீட்கப்படும் குழந்தைகளை போலீசார் மீட்டு நேரடியாக பெற்றோரிடம் ஒப்படைக்க கூடாது. மீட்கப்படும் குழந்தைகளை, மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் தான் போலீ சார் இனி ஒப்படைக்க வேண்டும். கவுன்சிலிங் வழங்கப்பட்டு, குழந்தைகள் விரும்பினால் மட்டுமே மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.இரவு நேரங்களில் ரயில் நிலையங்களில் மீட்கப்படும் குழந்தைகளை பாதுகாப்பாக தங்க வைக்க ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் குழந்தைகள் உதவி மையம் அமைக்கப்படும். இந்த மையத்தில் உணவு, உடை, படுக்கை, கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும். 24 மணி நேரமும் வரவேற்பாளர் ஒருவர் பணியில் இருப்பார்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment