Monday, 3 February 2014

டி.இ.டி., தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை: முதல்வர் ஜெயலலிதா

டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 55% மதிப்பெண் பெற்றாலே, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டப் பேரவையில் இதுகுறித்து முதல்வர் கூறியதாவது: டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.

இதன்படி, இனி நடைபெறும் டி.இ.டி., தேர்வுகளில், தேர்வர்கள் 55% மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். இந்த சலுகை, கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட டி.இ.டி., தேர்வுக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.

டி.இ.டி., தேர்வானது, மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுவதாகும். இதில் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என இரண்டு பிரிவுகள் உண்டு. தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு முதல் தாளும், உயர்நிலைக் கல்வி ஆசிரியர்களுக்கு இரண்டாம் தாளும் அடங்குபவை.

இந்த 2 தேர்வுகளிலுமே, சம்பந்தப்பட்ட தேர்வர்கள், குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள்(60%) பெற்றால்தான் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்ற நிலை இருந்தது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு எந்தவொரு மதிப்பெண் சலுகையும் வழங்கப்படவில்லை. இதனால் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்தன.

கடும் எதிர்ப்புகளையடுத்து, தற்போது, பொதுப்பிரிவை தவிர்த்த இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment