
வியாசர்பாடி : அம்பேத்கர் கல்லுாரியில், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி, மாணவ, மாணவியர், நேற்று உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர். கல்லுாரி நிர்வாகம், பிரச்னைகளை தீர்ப்பதாக உறுதி அளித்ததையடுத்து, போராட்டம் நிறுத்தப்பட்டது. எனினும், பிரச்னைகள் தொடர்ந்தால் போராட்டமும் தொடரும் என, மாணவர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து, மாணவர்கள் கூறியதாவது: வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் அரசு கலைக் கல்லுாரியில், 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கிறோம். அவர்களில், 900க்கும் மேற்பட்டோர் மாணவியர்.ஆனால், கல்லுாரியில் குடிநீர் மற்றும் போதிய கழிப்பறை வசதி இல்லை. மாணவியருக்கான கழிப்பறை ஒன்று மட்டுமே உள்ளது. அதுவும் படுமோசமாக உள்ளது. போதுமான வகுப்பறைகள் இல்லை. கல்லுாரி வளாகம் மற்றும் மைதானம் பராமரிப்பின்றி குப்பை வளாகம் போல் உள்ளது. ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. உணவக வசதி
கிடையாது. காவலாளி கூட இல்லை. ஒதுக்கீட்டு நிதி எங்கே? இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, கடந்த சில மாதங்களுக்கு முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, விரைவில் தீர்த்து வைப்பதாக, கல்லுாரி தரப்பில் உறுதிஅளிக்கப்பட்டது.ஆனால், இதுவரை பிரச்னை தீர்க்கப்படவில்லை. அதனால், போராட்டத்தை மீண்டும் துவக்கி உள்ளோம். கடந்தாண்டு, அரசு கல்லுாரிகளுக்கு, 100 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது.
அம்பேத்கர் கல்லுாரி வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட பல லட்சம் ரூபாய் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதுகுறித்து கல்லுாரி நிர்வாகத்தை கேட்டால், பொதுப்பணி துறையை கேட்க வேண்டும் என்கின்றனர். அவர்களை கேட்டால், வழக்கம் போல், இதோ, அதோ என, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கட்டடம் கட்டி வருகின்றனர். எங்கள் குறைகள் தீர்க்கப்படும் வரை, போராட்டம் தொடரும். இவ்வாறு மாணவர்கள் கூறினர். இனிமேல் தான் வருமாம்
இதுகுறித்து, பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு, கல்லுாரியின் பராமரிப்பு பணிகளுக்காக, 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த நிதியிலிருந்து, நான்கு பணிகள் மேற்கொள்ள, ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளது.
கழிப்பறைகளை அதிகப்படுத்துவதற்கு, சென்னை குடிநீர் வாரியத்துக்கு, கல்லுாரியின் சார்பில், வைப்பு தொகை செலுத்த வேண்டும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பிரச்னை முடிந்தவுடன், பொதுப்பணி துறையின் சார்பில், பணிகள் மேற்கொள்ளப்படும். அரசு கல்லுாரிகளின் பராமரிப்புக்கு, முதல்வர் ஒதுக்கிய, 100 கோடி ரூபாயில், எவ்வளவு ரூபாய், வியாசர்பாடி கல்லுாரிக்கு ஒதுக்கப்படும் என, தெரியவில்லை. திட்டமதிப்பீட்டுக்கு பின்னரே தெரியவரும். இவ்வாறு, அவர்கள் கூறினர். தொடரும் கல்லுாரி முதல்வர் சந்திரா கூறியதாவது:
கல்லுாரியில் பொதுப்பணி துறை சார்பில் பணிகள் நடக்கின்றன. கழிப்பறைக்கான இணைப்பு கொடுக்க காலதாமதமாகிறது. மற்றபடி பணிகள் அனைத்தும் மெதுவாக நடப்பதாக மாணவர்கள் கருதி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். கல்லுாரி நிர்வாகம், உடனடியாக வசதிகளை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்ததால், நேற்று மாணவர்களின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. எனினும், பிரச்னைகளை
தீர்க்காவிடில் போராட்டம் தொடரும் என, மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.
No comments:
Post a Comment