Thursday, 6 February 2014

தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடி

ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்கக் கோரிய பொதுநல மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தப் பிரிவினருக்கும் தளர்வு வழங்கக் கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதை கருத்தில் கொண்டு இந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது தொடர்பாக வழக்குரைஞர் எம்.பழனிமுத்து உள்பட பலர் உயர் நீதின்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:
தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்துப் பிரிவினருக்கும் ஒரே தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத தேர்ச்சி மதிப்பெண் தளர்வை வழங்க வேண்டும். இதர மாநிலங்களில் 5 முதல் 20 சதவீதம் வரை மதிப்பெண்ணில் தளர்வு வழங்கப்படுகிறது.
அதனால், தமிழகத்தில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பல்வேறு பிரிவினருக்கும் தகுதி மதிப்பெண் தளர்வு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் ஆசிரியராக நியமனம் செய்வதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வே அடிப்படை என்பதால், அதில் தேர்ச்சி பெறுபவர்களை மட்டுமே ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்ந்தெடுக்க வேண்டும் என தமிழக அரசு வழிகாட்டி விதிமுறைகளை அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வின் தகுதி மதிப்பெண்களை நிர்ணயிக்கும் தகுதி மாநில அரசுக்குத்தான் உள்ளது. தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்த அளவு தேர்ச்சி வீதத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் தளர்த்த முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றமும் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், தமிழகத்தில் தரமான கல்வி வழக்குவதற்காக தேர்ச்சி விகிதத்தில் தளர்வு வழங்க முடியாது என அரசு தெரிவித்துள்ளது. அதனால், தேர்ச்சி விகித்தில் தளர்ச்சி வழங்க முடியாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. அதே போன்றுதான் தற்போதைய மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றால்தான் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்க முடியும் என அரசு இந்த மதிப்பெண்ணை நிர்ணயித்துள்ளது.
மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்குரிய தகுதி மதிப்பெண்ணில் எந்தப் பிரிவினருக்கும் தளர்வு வழங்கக் கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு. அதனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தளர்வு வழங்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மனுதாரர்களில் ராஜரத்தினம் என்ற மனுதாரருக்கு மட்டும் ரூ. 10 ஆயிரம் அபாரதம் விதிக்கப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment