Sunday, 2 February 2014

தேர்வில், 'பிட்' அடிக்க, தேர்வு மையங்களே மாணவர்களுக்கு உதவும் அநியாயம்

தேர்வில், 'பிட்' அடிக்க, தேர்வு மையங்களே மாணவர்களுக்கு உதவும் அநியாயம், ஆந்திராவில் நடக்கிறது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முதல்வர், கிரண்குமார் ரெட்டி தலைமையிலான ஆந்திராவின், சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனபள்ளியில், கர்நாடக மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகத்தின் கல்வி மையம் (ஸ்டடி சென்டர்) உள்ளது. இங்கு, இரண்டு நாட்களுக்கு முன், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு தேர்வுகள் துவங்கின. ஒரு வாரம் நடைபெற உள்ள தேர்வுகள், ஊருக்கு ஒதுக்கு புறமான, மூடப்பட்ட ஒரு தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் துவங்கியது. இதில், கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த பலர், காலையும், மாலையும் தேர்வு எழுதுகின்றனர். அந்த மையத்தின் நிர்வாகிகள், தங்கள் மையத்திற்கு சிறந்த பெயர் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மாணவர்களுக்கு கைடு, பாட புத்தகங்கள், 'பிட்' பேப்பர்களைக் கொடுத்து, காப்பியடித்து, தேர்வெழுத அனுமதியளித்துள்ளனர். மேலும், மாணவர்களை அருகருகே அமர வைத்தும், பார்த்து எழுதவும் அனுமதி அளித்துள்ளனர். பல்கலைக்கழகத்திலிருந்து வந்த, கண்காணிப்பு அதிகாரிகளையும் தனியாக, 'கவனித்து'ள்ளனர். இதில், 'கைடுக்கு ஒரு ரேட், பிட்டுக்கு ஒரு ரேட்' என, மாணவர்களிடம் வசூலித்துள்ளனர். வேலையில்லா மாணவர்கள், உயர் பதவி பெற தேர்வெழுதும் ஊழியர்கள் என, ஏராளமானோர், இந்த மையத்தை தொடர்பு கொண்டு வருகின்றனர். இதனால், மேலும், இது போன்ற மையத்தில், படிப்பு வராவிட்டாலும், டிகிரி பெறுவது எளிது என்பதால், உண்மையில் படிப்பவர்களுக்கும் மதிப்பில்லாமல் போகிறது. இது போன்ற கல்வி மையங்கள் மீது, அந்த பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment