Saturday, 1 February 2014

பெற்றோரை போல ஆதரவளிக்கும் ஆசிரியர்களால் கற்றலில் குறைபாட்டிற்கு தீர்வு


மாணவர்களை அவர்களின் பெற்றோருக்கு இணையாக ஆதரவளிக்கும் ஆசிரியர்களால் கற்றலில் குறைபாட்டிற்கு தீர்வு கிடைக்குமென கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக உளவியல் துறை சார்பில் கற்றலில் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகளும், அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பயிலரங்கின் நிறைவு விழா நடைபெற்றது. துறைத்தலைவர் பேராசிரியர் கதிரவன் தலைமை வகித்தார். பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் ராஜேந்திரன் கலந்து கொண்டு, பயிலரங்கில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கினார். 
அப்போது அவர் பேசியதாவது:
தொடக்கப்பள்ளி முதல் கல்லூரிகள் வரை அணுக்கத்தன்மையற்ற ஆசிரியர்களின் வகுப்புகளை மாணவர்கள் புறக்கணிக்கிறார்கள். வகுப்பறையில் ஆசிரியர்கள் நண்பராக, ஆலோசகராக மற்றும் அதற்கும் மேல் தங்களுடைய பெற்றோருக்கு இணையாக ஆதரவாக இருக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மாணவ, மாணவியரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மாணவர்கள் எழுப்பும் சந்தேகங்களை மிரட்டலாக அணுகாமல், கனிவாக பதில் தரும் ஆசிரியர்களால் கற்றலில் குறைபாட்டை மிக சுலபமாக கண்டறிந்து தீர்வு ஏற்படுத்த முடியும். இளைய தலைமுறையினரை சரியாகவும், திறமை வாய்ந்தவர்களாகவும் வடிவமைப்பதில் முக்கிய பங்கு ஆசிரியர்களுக்கு உள்ளது. 
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆசிரியர்கள், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை மட்டுமே முக்கியமாக நினைக்காமல், வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து ஆதரவளிக்கும்போது, கற்றலில் குறைபாட்டிற்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment